பக்கம்:முள் வேலிகள் (நாவல்).pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

4


துணிந்து முன் வருகிற ஒரு சாதாரண இளைஞனையே சுலட்சணாவால் காதலிக்க முடிகிறது. இது ஒரு நுணுக்கமான மனோதத்துவக் கதை. ஒரு ரெஸிடென்ஷியல் பல்கலைக் கழகச் சூழ்நிலையில் எழுதப்பட்டிருக்கிறது. துணைவேந்தர், ஆக்டிங் வி. சி. எல்லாரும் வருகிறார்கள். போராட்டம் வருகிறது. அரசியல் பின்னணி, சூழ்நிலை எல்லாம் கூட வருகின்றன. ஆனால் கதைக்கு மையமானவள் சுலட்சணா தான். அவளைச் சுற்றியே கதை நடக்கிறது. கதையைச் சுற்றி அவள் நடக்கவில்லை என்பதைக் கவனிக்க வேண்டும்.

இந்த இரு நாவல்களும் இப்போது என் நூல்களைத் தொடர்ந்து வழக்கமாக வெளியிடும் தமிழ்ப்புத்தகாலயத்தார் மூலம் உங்கள் கைக்கு வருகின்றன. படியுங்கள், சிந்தி யுங்கள். கருத்துக்களைக் கலந்து பரிமாறவும் வாசகர்களாகிய உங்களுக்குத் தாராளமான உரிமை இருக்கிறது. கருத்துப் பரிமாற்றம் மூலமே விமரிசனமும் வளர முடியும். இலக்கியப் படைப்பும் வளர முடியும் என்ற நம்பிக்கை உடையவர்களில் யானும், ஒருவன் முன் கூட்டியே தீர்மானித்துக் கொள்ளப் பட்டு விடுகிற நிர்ப்பந்தமான விருப்பு வெறுப்புக்களோடு எந்த ஒரு நூலையும் அணுகும் பழக்கம் இலக்கிய உலகில் தவிர்க்கப்பட வேண்டும். திறந்த மனத்தோடு ஒரு நூலை அணுகிப் படித்து அதன்பின் முடிவு செய்வதே இயல்பான விமர்சன நிலை. ஆனால் இன்று விமர்சகர்களில் பலருக்கும் வாசகர்களில் சிலருக்கும் அத்தகைய இயல்பான விமர்சன மனப்பான்மை இல்லை என்பதால் தான் இதை இந்த முன்னுரையில் சற்றே அழுத்திச் சொல்ல வேண்டியிருக்கிறது.

இனி நீங்கள் புத்தகத்தைப் படிக்கலாம்.


தீபம்
சென்னை -600002 நா. பார்த்தசாரதி
27-8-1986