பக்கம்:முள் வேலிகள் (நாவல்).pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா.பா.

59

"இரண்டு பக்கத்து வீட்டு 'லைன்'கள் அவ்வப்போது அறுந்து விழ நேர்ந்ததனாலேயும், செடிகள்லே உரசறதுனாலேயும் தோட்டத்திலே நடமாடற உங்க குழந்தைகளோட. உயிருக்கு ஆபத்து ஏற்படலாம்னு கேஸைக் கொண்டு போகலாம். முதல்லே ஒரு இருநூறு ரூவா கொடுங்க...இந்த வக்காலத்துலே ஒரு கையெழுத்தும் போட்டுடுங்க... பாகவதர். அம்மிணி அம்மா, எம்.ஈ.எஸ் மூணு பேருக்கும் நோட்டீஸ் குடுத்திடுவோம்.

கண்ணன் தயங்கினான். "இப்பக் கையிலே அவ்வளவு பெரியதொகை இல்லே! நூறு ரூபாய் வரை இருக்கும்..."

"சரி அதைக் குடுத்துவிட்டுப் போங்க! பாக்கியை நாளைக் காலையிலே கொண்டாந்து குடுத்துடுங்க."

கண்ணன் கையிலிருந்த பணத்தை எல்லாம் திரட்டி நூறு ரூபாயை வக்கீலிடம் கொடுத்தான். உண்மை விளம்பி நண்பன் வக்கீலிடம் தனக்குத் தனியே கொஞ்சம் வேலையிருப்பதாகச் சொல்லவே அவனை அங்கேயே விட்டுவிட்டு வீடு திரும்பினான் கண்ணன்.

அங்கே வீட்டில் ஏற்கெனவே புலவர் மகிழ்மாறன் வந்து கண்ணனுக்காகக் காத்திருந்தார். கூட இருவர் சேர்ந்து வந்து காத்திருந்தனர். கண்ணனைப் பார்த்ததும் புலவர் தொடங்கிக் கூறலானர். "இவங்க தமிழர் தன்மானப் படையைச் சேர்ந்த இளைஞர்கள். நம்ம குடியிருப்பு அளவில் பிறமொழி விளம்பரப் பலகைகளை நீக்கித் தமிழில் எழுதணும்னு ஒரு இயக்கம் தொடங்கியிருக்கோம். உங்க ஒத்துழைப்பு எங்களுக்கு வேண்டும்."

"தாராளமா உண்டு! நீங்க தொடங்கற எந்த மூவ்மெண்டிற்கும் என் ஒத்துழைப்பு உண்டு. இந்தக் காலனியிலே ரெண்டு தமிழ் எதிரிங்க இருக்கிறது. உங்களுக்கே நல்லாத் தெரியும், ரெண்டு பேருமே எங்க பக்கத்து வீட்டுக் காரங்கதான்."