பக்கம்:முள் வேலிகள் (நாவல்).pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா. பா.

67

இருந்து தொலைக்கும். புலவர் மகிழ்மாறனுக்கு அப்படி ஒரு திறமை உண்டு. இரண்டே நாட்களில் கண்ணனை அந்தக் காலனிவாசிகள் அத்தனை பேருக்கும் விரோதியாக்கிவிட்டார். அதற்காகக் கண்ணனுக்குப் பத்து ரூபாய் வீண் செலவும் ஆகி ஆயிரம் ரூபாய்ப் பழியும் வந்து சுமந்திருந்தது. தாம் ஒத்துழைத்து ஆதரிப்பதன் மூலமே அப்படி ஆதரிக்கப் படுகிற வரை ஒன்றுமில்லாமல் பண்ணி விடுகிற சாமர்த்தியம் புலவருக்கு இருந்தது. கண்ணன் விஷயத்திலும் அதையே செய்து முடித்திருந்தார் அவர்.

பேரவையில் ஏதோ விரும்பத்தகாத திருப்பங்கள் ஏற்படப் போவதுபோல் கண்ணனுக்கே தோன்றியது. அவன் அஜெண்டா தயாரிக்கப் போனபோது தலைவர் பிடி கொடுக்காமல் நழுவுகிறார். ஏதோ செலவுக்காகச் செக்கில் கையெழுத்துக்குப் போன போது பொருளாளர், "இப்போ ஒண்ணும் அவசரமில்லே! கொஞ்சம் பொறுத்துச் செய்யலாம்" --என்று செக்கில் கையெழுத்துப் போடாமல் தட்டிக் கழித்து விட்டார். பொருளாளர் செய்தது எதற்கோ முன்னடையாளம் காட்டியது. .

சூழ்நிலை சரியாயில்லை! மர்மமாகத் தனக்கு எதிராய் எங்கோ ஏதோ சதி நடப்பது போல் கண்ணனுக்குத் தோன்றியது.

10

காலனி நலன் நாடுவோர் சங்கத்தின் அவசரப் பேரவை கூடியது. புலவர் மகிழ்மாறன் தன் அடியாட்களோடு கூட்டத்துக்கு வந்திருந்ததுடன் இரண்டு நிமிஷத்துக்கு ஒருமுறை கண்ணனின் அருகே வந்து காதருகே ஏதேதோ சொல்லிவிட்டுப்போனார். கண்ணணோடு மிக நெருக்கமாகக் காட்டிக் கொண்டார்.