பக்கம்:முள் வேலிகள் (நாவல்).pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
முள்வேலிகள்
1

ரண்டு வீடுகளுக்கும் நடுவில் வெறுப்பும் பகையும் எப்போது, எதனால் முளைத்து வளர்ந்தன என்று சரியாகச் சொல்லமுடியவில்லை. என்றோ எப்படியோ தொடங்கிப் படிப்படியாய் வளர்ந்து முற்றிவிட்டது. இருவரில் ஒருவர் அங்கிருந்து போகவும் வழி இல்லை. இருவருக்குமே அவை சொந்த வீடுகள். கண்ணனுக்கு அந்த எக்ஸ்டென்ஷனில் அந்த வீடு ஒதுக்கப்பட்டபோது பக்கத்து வீடு யாருக்கு அலாட் ஆகியிருக்கிறது என்று அவன் கவனிக்கவோ அக்கறை எடுத்துக்கொண்டு விசாரிக்கவோ செய்யவில்லை. அடையாற்றில் போய்க் கலக்கும் ஒரு கால்வாய் பின்புறம் வீடுகளை ஒட்டியிருப்பதும் ஒரு தடையாக அன்று பட வில்லை. எங்காவது எப்படியாவது சொந்தம் என்று சொல்லிக் கொள்ளும்படி ஒரு கையகல இடம் கிடைத்தால் போதும் என்று தேடித் தேடித் தவித்த அவன் அது கிடைத்து விட்டது என்பதிலேயே திருப்தியடைந்து விட்டான்.

பக்கத்து வீடு ‘அலாட்’ ஆகி ஆட்கள் குடி வந்ததும் கூட அது அவன் கவனத்தைக் கவரவில்லை. தற்செயலாகத் தேடிவந்த நண்பன் ஒருவன்—அவன் திரை உலகில் தொடர்புள்ளவன்—தான் முதலில் பக்கத்து வீட்டைப் பற்றிக் கண்ணனின் காதில் மெல்லக் கிசுகிசுத்துவிட்டுப் போனான்.