பக்கம்:முள் வேலிகள் (நாவல்).pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

68

முள்வேலிகள்

அவர் இப்படிச் சொல்லிவிட்டுப் போனதன் மூலம் கண்ணணோடு தான் மிகவும் நெருக்கம் என்று பேரவையின் கண் முன் வெளிப்படையாகக் காண்பித்துக் கொள்ளவே பேரவைக்குக் கண்ணன் மேலிருந்த வெறுப்பு அதிகமாயிற்று. தாம் யாரை நெருங்கி நிற்கிறாரோ அவர்களை அறவே திவாலாக்கி விடுவது புலவரின் வழக்கம். அன்றும் அதைத் தான் நடத்திக் கொண்டிருந்தார் அவர். வெற்றிகரமாகவே நடத்திக் கொண்டிருந்தார் என்று கூற வேண்டும்.

தலைவரும் மற்றவர்களும் கூட்ட ஆரம்பத்திலேயே புலவரின் அடியாட்கள் கூட்டத்தில் ஊடுருவியிருப்பதைக் கவனித்து இரகசியமாகப் போலீஸ் பாதுகாப்புக்குச் சொல்லியனுப்பி விட்டிருந்தார்கள். வெளியே போலீஸ் வந்து நின்றதும் தலைவர் எழுந்து அறிவித்தார்:

"இந்தக் காலனி அஸோஸியேஷன் அங்கத்தினர்கள் அல்லாத அந்நியர் யாரும் இந்தக் கூட்டத்தில் அமர்ந்திருந்தால், தயவுசெய்து அவர்கள் உடனே வெளியேறி விடுமாறு வேண்டுகிறோம்."

சங்கத் தலைவர் இப்படி அறிவித்த பின்பும் சிலர் வெளியேறாமல் இருக்கவே நிர்வாகிகள் வேறு முடிவுக்கு வந்தார்கள். எல்லாரையுமே வெளியேறச் செய்து மறுபடி ஆட்களை உறுப்பினரா இல்லையா என்று அடையாளம் பார்த்து அப்புறம் உள்ளே விடுவது என்றுஏற்பாடு ஆயிற்று. போலீஸ் உதவியுடன் உறுப்பினர் பட்டியலைக் கையில் வைத்துக் கொண்டு ஒவ்வொரு பெயராகப் படித்து ஆட்களே உள்ளே விட்டதும் கதவு உட்புறமாகத் தாழிடப்பட்டு அடைக்கப் பட்டுவிட்டது.

புலவர் மகிழ்மாறனோடு வந்திருந்த தன்மானத் தமிழர் பட்டாளத்து ஆள் முப்பது பேருக்குமேல் வெளியேற வேண்டியதாகி விட்டது. உறுப்பினர் என்ற முறையில் மகிழ்மாறன் மட்டும் உள்ளே விடப்பட்டார். ஆனால் மற்றவர்கள் அங்கு அவரை ஒரு வெறுப்போடு முறைத்துப் பார்த்தார்கள் என்பது வெளிப்படவே தெரிந்தது.