பக்கம்:முள் வேலிகள் (நாவல்).pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா. பா.

69

இந்த ஏற்பாடுகள் முடிந்ததும் தலைவர் எழுந்திருந்து பொதுவாக ஓர் உரை நிகழ்த்தினார். பொதுப்படையான பேச்சுப்போல ஒலித்தாலும் அங்கங்கே தன்னைச் சாடுவது போல் அவரது உரையில் உள்ளர்த்தம் இருப்பதைக் கண்ணன் கண்டு கொள்ள முடிந்தது. .

"ஒரு காலனியின் வளர்ச்சியைக் கவனிக்கும்போது எல்லார் நலனுக்கும் பாடுபடக்கூடிய பரந்த மனத்தோடு இருப்பது தான் நல்லது. தனித்தனி விரோதங்களைப், பெரிது படுத்தி வளர்த்தால் எந்தச் சங்கமும் உலைந்து விடும். ஒற்றுமையும் பொதுநல நோக்கமும்தான் இத்தகைய வெல்ஃ பேர் அஸோஸியேஷன்களுக்கு முழுமூச்சாயிருக்க வேண்டும். நமது உறுப்பினர்கள் பலர் சில மனத்தாங்கல்களைத் தெரிவிக்க இந்த அவசரக் கூட்டத்தைக் கூட்டும்படி வேண்டினார்கள். முதலில் ஏகாம்பர முதலியார் அவர்கள் பேசுவார்."

மிகவும் வயது மூத்தவராகிய ஏகாம்பர முதலியார் பேச வருவது போல வந்து திடீரென்று சட்டைப் பைக்குள் கையை விட்டு ஒரு காகிதத்தை எடுத்துப் படிக்க ஆரம்பித்தார்.

"இந்தக் காலனி நலன் நாடுவோர் சங்கத்தின் செயலாளராயிருந்து கொண்டே காலனியின் நலனுக்கும் ஒற்றுமைக்கும் புறம்பான காரியங்களில் ஈடுபடும் கண்ணன் அவர்கள் மேல் பெரும்பாலான உறுப்பினர்கள் நம்பிக்கையிழந்து விட்டதால் அவர் உடனடியாகச் செயலாளர் பதவியிலிருந்து இராஜிநாமா செய்யவேண்டும் அல்லது விலக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை நான் இப் பேரவையில் முன் மொழிகிறேன்."

"அதை நான் வழி மொழிகிறேன்" --என்றார் மாவுமில் உரிமையாளர் சங்கர சுப்பிரமணியம்.

"இப்படிச் செய்வது மரியாதை இல்லை. கண்ணன் இந்தக் காலனி நலனுக்காக எவ்வளவோ செய்திருக்கிறார்,

மு-5