பக்கம்:முள் வேலிகள் (நாவல்).pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா.பா.

71

மாறு வேண்டுகிறேன்" என்றார் பாகவதரும் அம்மிணி அம்மாளும் தாங்கள் ஒட்டெடுப்பில் கலந்து கொள்ளவில்லை என்றார்கள். முதலிலேயே ஒதுங்கிக் கொண்டார்கள்.

கண்ணனையும், மகிழ்மாறனையும் தவிர அனைவரும் கை தூக்கினர். முடிவு தெரிந்து விட்டாலும் ஒரு முறைக்காக, "இப்போது இந்த நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தை எதிர்த்து ஓட்டளிப்பவர்கள் கை தூக்கலாம்"--என்பதையும் தலைவர் அறிவித்தார். மகிழ்மாறனின் கை மட்டுமே உயர்ந்தது. கண்ணன் ஏதோ ஞாபகத்தில் பேசாமலிருந்து விட்டான். .

நம்பிக்கை இல்லாத் தீர்மானம் நிறைவேறியதாகத் தலைவர் அறிவித்தார். கண்ணன் முகத்தில் ஈயாடவில்லை. புலவரால் வந்த அவமானம் பொறுக்க முடியாமல் சங்க நிர்வாக சம்பந்தமான மினிட்ஸ் புக், ரசீது, லெட்ஜர் எல்லாவற்றையும் தலைவர் முன் தூக்கி எறிந்துவிட்டு ஆத்திரமாக வெளியேறினான் அவன்.

"பாகவதர் ஆதிக்கம் ஒழிக" என்று கத்திக். கூப்பாடு போட்டவாறு புலவரும் தன்னைப் பின் தொடர்ந்து வெளியேறியது கண்ணனுக்குப் பிடிக்கவில்லயானாலும் அதைத் தடுக்கவும் அவனால் முடியவில்லை. பலாத்காரமாக இந்தப் புலவர் தன் மேல் விழுந்து விழுந்து ஆதரிப்பதன் மூலம் தான் இன்னும் நிறைய அவமானப் பட நேரப்போகிறது என்றே அவன் உள்மனம் அவனுக்குச் சொல்லியது. கண்ணனும், புலவரும் வெளியேறியதும் வெளியே காத்திருந்த புலவரின் கூலிப் பட்டாளம் சம்பந்தமில்லாமல் அம்மிணி அம்மாவையும், பாகவதரையும் திட்டி மிக மலிவான கோஷங்களைப் போடத் தொடங்கினார்கள். அதுவும் கண்ணனுக்குப் பிடிக்க வில்லை. கண்ணனும் புலவரும் வெளியேறிய சிறிது நேரத்தில் புலவரைச் சங்கத்திலிருந்து வெளியேற்றும் தீர்மானமும் அங்கு ஏகமனதாக நிறைவேற்றப்பட்டதாகக் கேள்விப்பட்டார்கள் அவர்கள்.