பக்கம்:முள் வேலிகள் (நாவல்).pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

72

முள்வேலிகள்

ஒருவகையில் கண்ணன் தொல்லைகளிலிருந்து விடுபட்டதுபோல் உணர்ந்தான். இன்னொரு வகையில் மனசு குன்றி அவமானப்பட்டு மூக்கறுக்கப்பட்டது போலவும் தோன்றியது. அவன் புலிமேல் சவாரி செய்பவனுடைய நிலையிலிருந்தான். மகிழ்மாறனை அவனால் விடவும் முடியவில்லை. மகிழ்மாறன் அவனை விடவும் தயாராயில்லை.

அன்று மாலையிலேயே அவசர அவசரமாக அச்சிடப் பட்ட ஒரு புதிய 'லெட்டர் ஹெட்'டுடன் மறுபடி கண்ணனை வந்து சந்தித்தார் மகிழ்மாறன். 'அய்யப்பன் நகர அன்பர் கழகம்’--தலைவர்: கண்ணன்--பொதுச் செயலாளர்: புலவர் மகிழ்மாறன் என்று அச்சிடப்பட்டுப் புலவருடைய வீட்டு முகவரியே விலாசமாகக் கொடுக்கப்பட்டிருந்தது. கண்ணன் சற்றுக் கோபமாகவே அவரைக் கேட்டான்: "சட்டி சுட்டது--கையை விட்டது--அந்த மட்டில் தொல்லையில்லை என்று நான் ஒதுங்க விரும்புகிறேன் புலவரே! எனக்கு ஆயிரம் சொந்த வேலை இருக்கிறது. இதெல்லாம் ஏன் பண்றீங்க? நாமா ஒரு லெட்டர் பேடு போட்டுத் தலைவர், செயலாளர்னு மட்டும் எழுதிக்கிட்டாப் போதுமா? காரியம் நடக்க வேணுமா? யாரு செய்வாங்க...?"

"அப்படி விட்டுடப்பிடாதுங்க! அப்புறம் அவங்க துளுத்துப் போயிடுவாங்க. நம்மைக் கையாலாகாதவங்க... உப்புக் கல்லுக்குத் துப்பில்லாதவங்கன்னு நினைப்பாங்க... நீங்க ஒண்னும் பண்ணவேண்டாம். பேசாம இருங்க... போறும். எல்லாம் நானே பார்த்துக்கிறேன்."

"என்னத்தைப் பார்க்கப் போகிறீர்! மத்தவங்க மெம்பர் ஆவாங்களா இல்லியான்னு தெரியாம நீரா ஒரு பேரைச் சூட்டிக்கிட்டுக் காசு செலவழிச்சு லெட்டர் ஹெட் அடிச்சிருக்கீரே?...அதுதான் போகட்டும்! இதென்ன 'அன்பர் கழகம்’னு போட்டீரு? இது எப்படி வெல்ஃபேர் அஸோஸியேஷனைக் குறிக்கும்?"