பக்கம்:முள் வேலிகள் (நாவல்).pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா. பா.

75

புதுப் படங்கள் போடும் போது புருஷன் வீட்டில் இல்லா விட்டால் போய்ப் பார்ப்பதுகூட உண்டு. சில ஓய்வான வேளைகளில் பாகவதரும் கூட வந்து சினிமாப் பார்க்க உட்காருவார். கணவனைப் போல இவர்களை வெறுக்க அவளால் முடியவில்லை. கணவனின் அர்த்தமற்ற வெறுப்பை அவளால் முயன்று மாற்றவும் இயலவில்லை.

11

பாகவதர், அம்மிணி அம்மாள் தவிர மூன்றாவது எதிரியாகப் பாவிக்கக் கண்ணனுக்கு இன்னொரு மனிதர் கிடைத்தார். அவர்தான் ஐயப்பன் நகர் இரண்டாம் குறுக்குத் தெரு பதினெட்டாம் நம்பர் வீட்டுக்குரிய நீலகண்டன். கண்ணன் மேல் நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றிய பின்--அதே இடத்தில் காலனி நலன் நாடுவோர் சங்கத்தின் புதிய செயலாளராக இந்த நீலகண்டன்தான் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார்.

நீலகண்டன் பல்கலைக்கழக இந்தித் துறையில் பேராசிரியராக இருந்தார். பரம சாது. யாரோடும் வம்பு தும்புக்குப் போகாதவர். இவர் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப் பட்டவுடன் அதைப் புலவர் மகிழ்மாறன் தம் பாஷையில் கீழ்க்கண்டவாறு கண்ணனிடம் வந்து தெரிவித்தார்: "காலனியிலே இந்தி ஆதிக்கம் பரவுது! இல்லாட்டி எத்தினியோ ஆளுங்கள்ளாம் இருக்கறப்போ மந்தி நிகர் இந்தியைக் கற்பிக்கும் அந்தத் தொந்திக்கார நீலகண்டனைப் போய்ச் செயலாளராகத் தேர்ந்தெடுப்பாங்களா?"

"நீலகண்டனுக்கு ஏது ஐயா தொந்தி? ஊதினால் ஒடிந்து விழுகிற மாதிரி ஒல்லி ஆளாச்சே அவர்?"

"அட நீங்க ஒண்னு! தொந்தி இருந்தாத்தான் சொல்லணுமா? இந்தி, மந்தின்னு வர்றப்பத் தொந்தின்னும்