பக்கம்:முள் வேலிகள் (நாவல்).pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா.பா.

77

ஒரு பள்ளிக்கூடம் தொடங்கியது. கோயில் திருப்பணி வேலைக்கு அம்மிணி அம்மாள் முதலியவர்களின் நன்கொடை தாராளமாகக் கிடைத்து அது வேகமாக நடைபெற்றுக் கொண்டிருந்தது. அவர்கள் முயற்சியின் பேரில் எல்லாத் தெருக்களுக்கும் புதிய தார்ச்சாலைகள், மெர்க்குரி விளக்குகள் எல்லாம் வந்தன. அஸோஸியேஷன் முக்கியஸ்தர்கள் மின்சார வாரியத்தை அணுகி வற்புறுத்தியதன் பேரில் காலனி முழுவதற்குமே அண்டர் கிரவுண்ட் கேபிள் சிஸ்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. கண்ணன் வீட்டுத் தோட்டம் பிழைத்தது.

உண்மையில் பழைய அஸோஸியேஷன் இப்படியெல்லாம் வேகமாகவும் துடிதுடிப்பாகவும் செயற்படக் காரணமே கண்ணனைத் தலைவராகப் போட்டுப் புலவர் தொடங்கிய 'அய்யப்பன் நகர் அன்பர் கழகம்' என்ற லெட்டர் ஹெட் சங்கம்தான்.

எங்கே புதிய சங்கம் ஏதாவது வேகமாகச் செயல்பட்டுப் பழைய சங்கம் சோம்பேறி என்று நிரூபித்து விடப் போகிறதோ என்ற பயத்தில் கண்ணனை வெளியேற்றிய பழைய சங்கத்தினர் தீவிர வேகத்தோடு காலனி வளர்ச்சிக்குப் பாடுபட்டிருந்தனர்.

ஆனால் பழைய சங்கத்தை இப்படி ஒரு மிரட்டு மிரட்டி வேகமாக முடுக்கிவிட்ட புதிய சங்கமோ வெறும் லெட்டர் ஹெட்டுடன் நின்று போன மாதிரி அப்படியே தேங்கி விட்டது. . .

திடீரென்று புலவர் ஒருநாள் படு உற்சாகத்தோடு கண்ணனைத் தேடி வந்தார். "ஒரு புது யோசனை! இதை மட்டும் கடைபிடிச்சோம்னா அத்தினி அங்கத்தினர்களும் அந்தச் சங்கத்தை விட்டுப்பிட்டு நம்ம கிட்டே வந்து சேர்ந்திடுவாங்க. இது நிச்சயம்."

"என்ன யோசனை அது?"