பக்கம்:முள் வேலிகள் (நாவல்).pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

80

முள்வேலிகள்

கண்ணன் எங்கே தன்னைத் தனியே விட்டு விட்டுப் பாகவதர் அம்மிணியப்மாள் வசம் சேர்ந்து விடுவானோ என்ற பயத்தில் அதைத் தடுப்பதற்கான நிரந்தர முயற்சியாகப் புலவர் இந்தக் கோள்மூட்டுதலைச் செய்துவந்தார். அது பயனளித்தது. கண்ணனின் அண்டை வீட்டாருடன் அவனுக்குள்ள விரோதம் தணிந்துவிடாமல் அவ்வப்போது புலவர் புதுப் புது நெருப்பைப் பற்ற வைத்துச் சமாளித்தார்.

"குருவாயூர் அப்பன், ஐயப்பன் சந்நிதிகள் தமிழர் வழிபாட்டு மரபுக்கு முரணானவை. அவை அமைவதை அ. அ. க. மறியல் செய்து தடுக்கும்'---என்று திடுதிப்பென்று காலனி முழுவதும் ஒரு சுவரொட்டி ஒட்டப் பட்டிருந்தது. சுவரொட்டியில் மீசையோடு பிரமாதமாகத் தென்பட்ட புலவரின் புகைப்படமும் இருந்தது. இது விஷயமாகப் புலவர் கண்ணனிடம் எதுவும் பிரஸ்தாபிக்கக்கூட இல்லை. அவரே முடிவு செய்து அவரே போஸ்டரும் அடித்து ஒட்டி விட்டார். அ. அ. க. வில் தன் பெயர் சம்பந்தப் பட்டிருப்பதால் கண்ணன் புலவரைக் கூப்பிட்டுக் கண்டித்தான். புலவர் அவனுடைய கண்டிப்பைக் கேட்டுச் சிறிதும் அயரவில்லை.

"நீங்க இதெல்லாம் கண்டுக்காதீங்க. போராட்டத்திலே நீங்க குதிக்கணும்கிறதும் இல்லே. நானும் நம்ம படை வீரர்களுமே பார்த்துக்கிறோம். சும்மா இப்பிடி அவங்களுக்கு ஏதாவது தலைவலி குடுத்துக்கிட்டே இருக்கணும். இல்லாட்டி நாம இருக்கோம்கிறதையே மறந்துடுவாங்க."

"அது சரி தலைவர்னு எம் பேரை லெட்டர்ஹெட்ல போட்டுருக்கீங்களே; அதையாவது தயவு செய்து எடுத்துடுங்க."