பக்கம்:முள் வேலிகள் (நாவல்).pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

84

முள்வேலிகள்

திருக்கிறார்கள் என்பதாகப் புலவர் வைத்திருந்த வத்தி நன்றாகப் புகைந்தது. பற்றி எரிந்தது. நல்லெண்ணத்தைக் கணிசமாக நாசம் பண்ணியது. மனத்தில் துவேஷத்தைத் தேங்கவிட்டது. 'இந்தப் பேட்டையின் நன்மைக்காக இராப் பகலாக அலைந்து நான் தொடங்கி வளர்த்த ஒரு சங்கத்தில் நானே உறுப்பினராகத் தேடிப் போய்ச் சேர்த்த இந்தப் பாகவதர் என்னேயே வெளியேற்றி விட்டாரே?'-- என்ற கசப்புக் கழுத்து முட்ட நிரம்பியிருந்தது கண்ணனிடம்.

செயற்குழுக் கூட்டத்திலும், பேரவையிலும் பாகவதர் தன்னை ஆதரித்தாற் போலக் காட்டிக் கொண்டதெல்லாம் சும்மா வெறும் நடிப்பு என்று புலவர் சொல்லியதுதான் சரி என்பதாகவும் நம்பினான் கண்ணன்.

யாரிடம் கோள் சொல்லுகிறோமோ அவருக்கு ஏற்கெனவே பிடிக்காமல் போய்விட்ட ஒருவரைப் பற்றிக் கோள் சொல்லுவது என்பது காய்ந்த பஞ்சுப் பொதியில் நெருப்பு மூட்டுவதைப் போல் மிகவும் இலகுவான காரியம். புலவர் அப்படித்தான் கண்ணனிடம் நெருப்பு மூட்டியிருந்தார். வகையாகப் பார்த்துப் பற்ற வைத்திருந்தார்.

கண்ணன் எதனாலாவது பாகவதருடனும், அம்மிணியம்மாளோடும் மறுபடி சிநேகிதமாகி விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டிய கட்டாயம் இன்று புலவருக்கு ஏற்பட்டிருத்தது. காரணம் புதுச் சங்கம். தான் புதிதாகக் கண்ணனை வைத்துத் தொடங்கியிருந்த அய்யப்பன் நகர் அன்பர் கழகத்தில் உறுப்பினர்கள் சேர்க்கும் முயற்சியில் இறங்கினர் புலவர். அதற்குக் கண்ணனின் முழு ஆதரவும் அவருக்குத் தேவையாயிருந்தது.

ஒரு ஞாயிற்றுக் கிழமை காலையில் ஏழெட்டு ஆட்களுடனும், புதிதாக அச்சிட்ட ரசீதுப் புத்தகங்களுடனும் கண்ணனைத் தேடி வந்தார் புலவர். கண்ணன் புலவரைக் கேட்டான்!