பக்கம்:முள் வேலிகள் (நாவல்).pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

86

முள்வேலிகள்

"மக்களே போல்வர் கயவர்."

"அப்படின்னா என்ன அர்த்தம் புலவரே?"

"நான் சொல்லலே. வள்ளுவர் சொல்லிட்டுப் போயிருக்கிறாரு."

"சரி, போகட்டும்! இப்பச் சுருக்கமா விஷயத்துக்கு வாங்க! அந்த அஸோஸியேஷன்ல இருக்கிற எல்லாரையுமே நம்ம அன்பர் கழகத்திலே சேர்க்க முயற்சி பண்ணப் போறோமா? அல்லது சில பேரை நாமே வேண்டாம்னு ஒதுக்கிடலாமா?"

"கண்டிப்பா சில பேரை ஒதுக்கியே ஆகணுங்க. அம்மிணி அம்மாள் என்ற திரையுலக மின்மினியம்மாள்களின் தாய், பாகவதர் என்னும் ஆலகால விஷம், நீலகண்டன் என்னும் நச்சுப் பாம்பு, பழைய சங்கத்தின் தலைவர், இவங்களை எல்லாம் நம்ம அ. அ. க.விலே சேர்க்கவே கூடாது."

"அதுக்குள்ளே எல்லாருக்குமே இப்பிடி அடைமொழி தயார்ப் பண்ணிக் கேவலப்படுத்துகிறீரே...?"

"பின்னே சும்மாவா? அவங்க உங்களே வெளியேத்திக் கேவலப்படுத்தினங்களா, இல்லீயா?"

புலவர் வசூலுக்குக் கூட அழைத்துச் செல்லாமல் விட மாட்டார் போலிருந்தது. சில வகைகளில் பார்க்கப் போனால் பண வசூல் போன்ற காரியங்களில் அவரைத் தனியே விடுவதைக் காட்டிலும் தான் கூடப் போவது ஒருவகைத் தற்காப்பு என்றே கண்ணனும் நினைத்தான். அவரைத் தனியே விட்டு விட்டுப் போக அவர் தயாராயில்லே. அவரைத்தனியே அனுப்ப அவனும் தயங்கினான். கடைசியில் தவிர்க்க முடியாமல் வேண்டா வெறுப்பாகக் கண்ணனும் அவர்களோடு கிளம்ப வேண்டியதாயிற்று.

போன முதல் வீடு, ஒரு சர்க்கார் உத்தியோகஸ்தருடையது. புலவர் அ. அ. க. என்று தொடங்கியதுமே, "நான் அரசியல் கட்சிங்க எதுலேயும் சேர்றதுக்கு இல்லீங்க! மன்னிக்கனும்" என்று வாசற்படியிலேயே கைகூப்பிவிட்டு உள்ளே போய்க் கதவைத் தாழிட்டுக் கொண்டார் அவர்.