பக்கம்:முள் வேலிகள் (நாவல்).pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

88

முள் வேலிகள்

யேஷன்ல அவரும் இருக்காரில்லே...?" என்று கேட்டுவிட்டு அவன் முகத்தை ஏறிட்டுப் பார்த்த சிலரிடம், "இல்லை சார்! இது வேற புதுச் சங்கம். இதுக்கு நான் பிரஸிடெண்ட். இவர் செகரெட்டரி" என்று கண்ணன் பதில் கூறியதும், "அப்பிடியா? வீ ஆர் நாட் இண்ட்ரஸ்ட்டட்" என்று கையை விரித்தார்கள் பலர்.

மிகக் குறைந்த காலத்திற்குள்ளேயே பாகவதர், அம்மிணியம்மாள் இருவரும் காலனிக்குள் மிகவும் மரியாதைக்குரியவர்களாகி இருப்பது கண்ணனுக்கே தெரிந்தது. உண்மை விளம்பியின் கட்டுரைகளோ, புலவரின் பிரசாரமோ யாரையுமே பாதித்திருப்பதாகத் தெரியவில்லை. அவர்கள் பாகவதர், அம்மிணியம்மாள் ஆகியோருடன் இயங்கும் பழைய வெல்ஃபேர் அஸோஸியேஷனேயே கொண்டாடினர்கள். சிலர் கொஞ்சம் துணிச்சலாகவே, "இந்தக் காலனிக்கு ரெண்டு சங்கம் எதுக்கு சார்? இருக்கிற நானூறு ஐந்நூறு வீடுகளும் ஒத்துமையா ஒரே சங்கத்திலே இருந்தாத்தான் ஏதாவது நாலு காரியம் சாதிக்க முடியும்? புதுப் புதுச் சங்கம் எல்லாம் ஒண்ணும் பண்ணமுடியாது. இதெல்லாம் வீண் வேலை" என்றே கண்ணனைக் கண்டித்தார்கள்.

கண்ணனை அதுவரை நேரில் பார்த்திராத சில வீடுகளில், இவர்கள் தங்களை யாரென்று அறிமுகப்படுத்திக் கொள்வதற்குள்ளேயே, "நீலகண்டன் செகரட்டரியா வந்தப்புறம் காலனி அஸோஸியேஷன் எவ்வளவோ நல்லாச் செயல்படுது. பல நல்ல காரியங்கள் வேகமா நிறைவேறியிருக்கு. பழைய செகரெட்டரி காலத்திலே சந்தா வசூலுக்குத்தான் வருவாங்க...ஒரு வேலையும் நடக்காது" என்று ஆரம்பித்து விடுவார்கள். கண்ணனுக்கும், புலவருக்கும் தர்மசங்கடமாகப் போய்த் தாங்கள் யாரென்று சொல்லிக் கொள்ளாமலே அப்படி இடங்களிலிருந்து நைஸாக வெளியேற நேர்ந்தது.