பக்கம்:முள் வேலிகள் (நாவல்).pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

90

முள் வேலிகள்

யிலே 'கோயில் திருப்பணியில் ஊழல்! பாகவதர் வகையறா பணத்தில் திருவிளையாடல்’னு கிளப்பலாம்னு பார்க்கிறேன்."

"வீண் வேலை. பலிக்கும்னு எனக்குத் தோணலை. யாரும் நம்ப மாட்டாங்க."

"தொடர்ந்து சொல்லிக்கிட்டே இருந்தா எதையும் நம்ப வச்சிடலாம்னு நம்பறவன் நான்."

"நீர் தொடர்ந்து வசூல் பண்ணிக்கிட்டே இருக்கிற மாதிரிதான் இதுவும் ஆகும்" என்று கூறிச் சிரித்தான் கண்ணன். வெளிப்படையாக இப்படிப் புலவரைக் கிண்டல் செய்தாலும் கண்ணனுடைய மனத்திற்குள்ளும் பழைய வெல்ஃபேர் அஸோஸியேஷனயும் தன்னை அவமானப் படுத்தியவர்களையும் பழிவாங்க வேண்டும் என்ற முனைப்பே மிகுந்திருந்தது. அதன் காரணமாக அவன் புலவரை ஊக்கப் படுத்தாவிட்டாலும் தளரச் செய்யவில்லை.

பழைய சங்க நிர்வாகிகள் மேல் கணக்கு ஊழல் என்று புலவர் எதைக் கிளப்பினாலும் சரிதான் என்று எண்ணினான் அவன் உள்ளூர ஒரு சந்தேகமும் இருந்தது. புலவரைப் போன்ற பல கணக்குகளில் ஊழல் உள்ள ஒருவர் கிளப்புகிற ஊழல் புகாரை யாராவது நம்புவார்களா என்ற சந்தேகம் அவனுள் இருந்தாலும் அவரைப் பயன்படுத்திக் கொள்ள அவன் தயாராகவே இருந்தான். முதல்தரமான எதிரிகளை ஒழிக்க நாலாந்தரமான சுமாரான ஒரு நண்பன் கூடப் பயன் படலாம் என அவன் நம்பினான். அ. அ.க. பெரிதாக வளர்ந்து பழைய காலனி நலன் நாடுவோர் சங்கத்தை அழிக்க முடியாது என்று இப்போது அவனுக்கே தெளிவாகத் தெரிந்தாலும் தன்னை வெளியேற்றி அவமானப்படுத்திய பழைய சங்கத்தைகயும், அதன் ஆட்களையும் வெறுக்கும் வெறுப்புடன் கூடிய குரோதம் அவன் மனத்தின் ஆழத்திலே வேரூன்றித் தங்கி இருக்கத்தான் செய்தது.