பக்கம்:முள் வேலிகள் (நாவல்).pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

94

முள்வேலிலிகள்

சோற்றிலா மண்ணை அள்ளிப் போட்டு விட்டார்கள்? ஏதோ விரோதம், அஸோஸியேஷன் சண்டை இதெல்லாம் இவர் மட்டில் சரி. எனக்கென்ன வந்தது? நான் சகஜமாகப் பழகிக் கொண்டிருக்கிறவள். ஏன் முகத்தை முறித்துக் கொள்ள வேண்டும்?' என்று எண்ணினாள் சுகன்யா.

பகைமையும் வெறுப்பும் மனிதனை எவ்வளவு கொடிய மிருகமாக மாற்றிவிட முடியும் என்பதற்கு உதாரணமாக அன்று நடந்து கொண்டான் கண்ணன். வேண்டுமென்றே அன்று மனைவியைச் சண்டைக்கு இழுத்தான் அவன்.

"இப்படிச் செய்யறதும் புருஷனுக்குத் தெரியாமச் சோரம் போறதும் ஒண்ணுதான்! சோரம் போறதுக்குத் தவணை முறையிலே விலை பேசற வீட்டிலே இருக்கிற ஆளுங்களோட பழகின வேற என்ன புத்தி வரும்?"

"நாக்கை அளந்து பேசுங்க. வாயிலே வந்ததைப் பேசாதீங்க."

"மான ரோஷம் இல்லாத ஜன்மங்களுக்கு என்ன பேசினாலும் உறைக்கப் போறதில்லே. எத்தனை தரம் கண்டிச்சாலும் புத்தி வரப் போறதில்லே. பன்றியோட சேர்ந்த கன்றும் மலம் தின்னும்னு பழமொழியே இருக்கு! தெரியுமா?"

"இதா பாருங்க...என்னைத் திட்டறத்துக்கும் வையிறத்துக்கும் வேணா உங்களுக்கு உரிமை இருக்கு அநாவசியமா அடுத்தவங்களைத் திட்டறதோ தாறுமாறாப் பேசறதோ கொஞ்சங்கூட நல்லா இல்லே."

"ஆமாம்! பெரிய படிதாண்டாப் பத்தினிங்க பாரு...நான் பேசறதைக் கேட்டு அப்பிடியே நாந்துக்கிட்டுச் செத்துறப் போறாங்க..."

"அவங்கவங்க மனசறிய ஒழுங்கா இருந்தாப் போறும். இன்னொருத்தர் மெச்சறதுக்காக வேஷம் போடணுமா என்ன?"