பக்கம்:முஸ்லீம்களும் தமிழகமும்.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.


15

பரங்கியரும், முஸ்லீம்களும்


நமது நாட்டுடன் வாணிபத்தில் தொடர்பு கொண்ட இசுலாமிய அரபிகள், மேற்கு, கிழக்கு கரைகளில் உள்ள கடற்துறைகளில் தங்கி தங்களது வாணிபத்தை வளர்த்ததுடன் இந்த மண்ணின் மலர்ச்சிக்கும் உதவியதை முந்தைய பகுதிகளில் பார்த்தோம். ஆனால் பதினாறாவது நூற்றாண்டின் துவக்கத்தில் இந்தப்புனித மண்ணில் பரங்கிகளது கால்கள் பட்டவுடன் இங்கிருந்த இசுலாமியர்களது சமய வாழ்க்கையிலும் சமுதாய அமைப்பிலும் விரும்பத்தகாத மாற்றங்களும் விளைவுகளும் நிகழ்ந்தன. அந்தப் பரங்கிகள் யார்? அவர்கள் இழைத்த இன்னல்கள் யாவை? பன்னிரண்டாம் நூற்றாண்டில் அரபுத் தாயகத்தில் நடைபெற்ற சிலுவைப்போரில் கலந்து கொண்ட ஐரோப்பியர் அனைவரையும் முஸ்லீம்கள் "பரங்கி" என அழைத்தனர். "பலாங்" என்ற சொல் "பரங்" ஆகி பின்னர் "பரங்கி" ஆயிற்று. பாரசீக மொழியில் "பெரங்கி" என்றாகியது. முகலாயப் பேரரசர் பாபர், முதன் முதலில் போர்ச்சுகீசிய மக்களை "பரங்கி" என அழைத்தார்.[1] ஏனெனில் முதன் முறையாக வணிகத்திற்கு நமது நாட்டிற்கு வந்த மேனாட்டார் போர்ச்சுகல் நாட்டவர். ஆதலால் அவர்கள் பரங்கி எனக் குறிப்பிடப்பட்டனர். பின்னர் அவர்களையடுத்து இங்கு வந்த பிரஞ்சு, ஆங்கில நாட்டவரும் அதே இடு குறிப்பெயரில் வழங்கப்பட்டனர்.


  1. P. E. Peris and R.B.Naish — Ceylora and Portughese. (1986) P.26