பக்கம்:முஸ்லீம்களும் தமிழகமும்.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.


16

மீண்டும் வாணிபத்தில்

 

போர்ச்சுக்கீஸிய பரங்கிகளது மிருகத்தனமான நடவடிக்கைகளாக பாதிக்கப்பட்டிருந்த மலாக்கா முதல் ஏடன் வரையிலான நீண்ட வாணிப வழியில் இசுலாமியரது மரக்கலங்கள் மீண்டும் மெதுவாக செல்லத் தொடங்கின. அவை அனைத்தும் கீழக்கரை வள்ளல் சீதக்காதி என்ற ஷெய்கு அப்துல் காதிறு மரைக்காயருடையவை, "தரணி புகழ் பெரிய தம்பி வரத்தால் உதித்த” இந்த வணிகப் பெருமகனுக்கு பதினேழாவது நூற்றாண்டில் இந்திய துணைக்கண்டத்தில் எவருக்கும் வாய்த்து இராத செல்வவளம் இருந்தது. அதற்கு மேலாக, மக்கட்கு அள்ளி அள்ளி வழங்கும் அன்பு உள்ளமும் அமைந்து இருந்தது. "திரைகண்டு எழுங்கடல் மீதே தன் வங்கத்தை செல்லவிட்டு கரைகண்டவர்” என வள்ளலது கடல் வாணிபத்துக்கு புலவர் ஒருவர் கரை கண்டுள்ளார்.[1] அவரது கப்பல்கள் சீனத்து நவமணிகளையும, அச்சைனில்(கம்போடிய) இருந்து அழகிய குதிரைகளையும், மலாக்காவில் இருந்து கஸ்தூரி, அம்பர், முதலிய வாசனைப் பொருட்களையும், ஈழத்தில் இருந்து வேழங்களையும் இன்னும் பல தேசத்து பொன்னையும், மலைகள் போல கொண்டு வந்து குவித்தாக அவரது வாணிப வன்மையை இன்னொரு பாடல் அளவிடுகிறது.[2]

"செய்யி தப்துல்காதிறு மரைக்காயர் திருமணவாழ்த்து. "சீதக்காதி நொண்டிநாடகம்" என்ற இருசிற்றிலக்கியங்களுக்கும்


  1. தனிப்பாடல் - நமச்சிவாயப்புலவர்
  2. உமறுப்புலவர் - சீதக்காதி திருமண வாழ்த்து கண்ணிகள் 75-83-1952