பக்கம்:முஸ்லீம்களும் தமிழகமும்.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

111

இன்னும், படிக்காசுப்புலவர் நமச்சிவாயப்புலவர் ஆகிய புலவர் பெருமக்களது தனிப்பாடல்களுக்கும், பாட்டுடைத் தலைவராக விளங்கும் இந்த வள்ளலைப் பற்றிய போதியவரலாற்று ஆவணங்கள் கிடைக்காதது தமிழக முஸ்லீம்களது துரதிர்ஷ்டம் என்றே குறிக்க வேண்டியுள்ளது. ஈதலறத்திற்கு இலக்கணமாக, இஸ்லாமிய நெறிகளுக்கு எடுத்துக்காட்டாக விளங்கிய இந்த இசுலாமிய தமிழ்த்தலைவனை முழுமையாகத் தெரிந்து கொள்ளும் வாய்ப்பை இழந்து விட்டோம். ஆனால் கி.பி. 1682க்கும் கி.பி. 1698 க்கும் இடைப்பட்ட காலத்தில் இலங்கைக்கும் இந்தியாவிற்குமான மிளகு, கைத்தறித்துணிகள் முத்து, சங்கு, ஆகிய வணிகத்தில் நேரடியாக போட்டியிட்ட டச்சுக்கிழக்கு இந்தியக் கும்பெனியாரது ஆவணங்களில் இருந்து அவரது வாணிப வளத்தை ஓரளவு தெரிந்து கொள்ளத்தக்கதாக இருக்கிறது. அவரது வாணிபக் கலங்கள் நமது நாட்டுக் கடலோர வணிகத்தில் ஈடுபட்டதுமல்லாமல்-வங்காளம்-மலாக்கா, அச்சைன் ஆகிய தூர கிழக்கு நாடுகளுக்கு சென்று வந்த விவரமும் தெரிகிறது. மற்றும், சென்னை கோட்டைகுறிப்புகளில் இருந்து வள்ளல் அவர்கள் ஆங்கில கிழக்கிந்திய கும்பெனியாரு டன் கி.பி. 1685-87ல் மிளகு, அரிசி, வாணிபம் சம்பந்தமாக கொண்டிருந்ததொடர்புகள் தெரியவருகின்றன.[1] மேலும் யாழ்ப்பாணத்தில் இருந்த டச்சு தளபதி படேனியாவில் உள்ள டச்சுக்கவர்னருக்கு அனுப்பிய குறிப்புகளில் இருந்து கி.பி. 1695ல் வள்ளல் சீதக்காதி டச்சுக்காரர்களுடன் வாணிபத் தொடர்புகள் கொண்டு இருந்ததையும்: மன்னருக்கும் கல்பிட்டியாவிற்கு இடைப்பட்ட கடல் பகுதியில் சங்கு குளிப்பதற்கான அனுமதி கோரிய விவரமும் தெரியவருகிறது.[2] அன்றைய காலகட்டத்தில் மன்னார் வளைகுடாவிலும், சோழமண்டலக்கரையிலும் எடுக்கப்பட்ட சங்குகள் பெரும்பாலும் வங்காளத்திற்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தன. நமது நாட்டில் ஏனைய பகுதிகளைவிட வங்காளத்து இந்துக்கள் சங்கை சிறந்த மங்கலப் பொருளாக புனிதமுடன் போற்றி வந்தனர். வங்க நாட்டுப் பெண்கள் சங்கினால் செய்யப்பட்ட வளையல்களை சங்க காலத்து தமிழ் மகளிரைப் போல் அணிந்து வந்தனர்.


  1. அமீர் அலி - என், சீதக்காதி சமயமும் வாழ்வும் (1993)
  2. Memoir of Hendrick Zwaardecroom (1911) p. 9.