பக்கம்:முஸ்லீம்களும் தமிழகமும்.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

113

லாமியரே. கி. பி. 1794ல் இராமநாதபுரம் சேதுபதி மன்னருக்குச் சொந்தமான 11,20,000 சங்குகள் தேவிபட்டினம் துறையில் இருந்து கிழக்கரை எல்லே தண்டல் என்பவரது "களிமண்பார"' என்ற சரக்கு கப்பலில் ஏற்றப்பட்டு வங்காளத்திற்கு அனுப்பப்பட்டது. மீரா நயினா என்ற பிரமுகர், மன்னரது வியாபாரப் பிரதிநிதியாக கல்கத்தாவில் பணிபுரிந்தார். இந்தக்கப்பல் தேவி பட்டினம் துறைமுகத்திலிருந்து நாகூர், கட்டிக்கூர், பிம்லிபட்டினம், பச்சைமரி, ஹூக்லி துறைமுகங்களைத் தொட்டு கல்கத்தா சென்று அடைந்ததாக அரசு ஆவணம் ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.[1] வங்காளத்திற்கும் தமிழகத்திற்கும் இடையிலான கடல் பயணம் நீண்ட நெடுங்காலமாக இந்த ஊர்களின் வழிதான் சென்றது என்பதை இளையான்குடி மதாறுப்புலவர் பாடிய சேதுபதி ஏலப்பாட்டு என்ற சிற்றிலக்கியமும் உறுதி செய்கிறது.[2] வங்காளத்தில் இருந்து திரும்பும் தோணிகளில் அந்த நாட்டு, அரிசி, சீனப்பட்டு, கண்ணாடிச்சாமான், லஸ்தர் விளக்குகள் போன்ற புதுமைப் பொருட்கள் தமிழ்நாட்டிற்கு ஏற்றி வரப்பட்டன. வாணிபம் மீண்டும் உச்சநிலையையடைந்தாலும் தொடர்ந்து அந்த நிலைமை உறுதிபடுத்தக்கூடிய வரலாற்று, இலக்கியச்சான்றுகள் இல்லை. அப்பொழுது தமிழக வாணிபத்தில் ஈடுபட்ட டச்சுக்காரர், ஆங்கிலேயர், பிரஞ்சுக்காரர் பங்கும், போட்டியும் மிகுந்து இருந்தன. என்றாலும், கரையோர வாணிபத்தில் ஆங்காங்குள்ள மரக்காயர்கள் ஈடுபட்டு இருந்ததாக டச்சு ஆவணங்கள் குறிப்பிடுகின்றன. தமிழ்நாட்டிற்கும் வங்கத்துக்கும், தமிழ்நாட்டிற்கும் இலங்கைக்கும், இசுலாமியரது மரக்கலங்கள், கைத்தறித்துணிகள், சங்கு, உப்பு, நெல், கரு வாட்டு சிப்பங்கள் தென்னங்கீற்றுகள், ஆகிய பொருட்களை எடுத்துச் சென்றன. தூத்துக்குடி கீழக்கரை, வேதாளைபாம்பன், தேவிபட்டினம், தொண்டி, பாசிப்பட்டினம் அதிவீரராமபட்டினம், கடலூர், நாகப்பட்டினம், போர்டோ நோவோ, பாண்டிச்சேரி ஆகிய துறைகள் இத்தகைய சரக்குகளைக் கொண்ட தோனிகள், தண்டல்களுடன் காட்சியளித்தன.


  1. Tamilnadu Archives - Military Consultations vol. 105 A р. 2622.
  2. அமீர் அலி N. கேப்டன் - இசுலாமிய தமிழ் ஆராய்ச்சி மாநாட்டு மலர் (1973) பக். 41, 42.