பக்கம்:முஸ்லீம்களும் தமிழகமும்.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.


19

சமுதாயப் பிரதிபலிப்புகள்


தமிழகத்தின் வாணிபச் சிறப்பிற்கு உதவிய அராபிய இஸ்லாமியர்களது செல்வாக்கு, தமிழகத்தின் அரசியல் சமுதாய நிலைகளில் பிரகாசித்தன. நல்லவிதமான வாணிபத்திற்கு நாணயத்துடன் நாணயமும் தேவை. கடைச் சங்க இலக்கியங்களில், நாணயங்களைப் பற்றிய குறிப்புகள் இல்லை. பண்ட மாற்று முறை அப்பொழுது இருந்ததை "பகர் விரவு நெல்லின் பலவரி யன்ன ... ..." என்ற மலைபடுகடாம் தொடர் சான்று பகருகிறது. அன்றைய பாணர்களுக்கு, வேந்தர்களும் வள்ளல்களும் அன்பளிப்பாக பூவுடன் பொன்னும் பொற்றாமரையும் வழங்கி மகிழ்ந்த செய்திகளை பதிற்றுப் பத்தும் புறநானூறும் பொலிவுடன் முழங்குகின்றன. காலப் போக்கில் யவனர்களது தொடர்பு ஏற்பட்டவுடன், பண்டமாற்றுப் பொருளாக அவர்கள் வழங்கிய பொன், வெள்ளி, நாணயங்கள் தமிழ்நாட்டில் செலாவணியாக பயன்படுத்தப்பட்டன. கிரேக்க, லத்தீன் மொழிகளில் தங்க நாணயம் "தினேரியஸ்" எனவும், வெள்ளி நாணயம் “திரம்மா” எனவும் பெயர் பெறும். இந்த நாணயங்களில் தங்க நாணயம் நான்கு கிராம் எடையுடைது பத்து திரம்மா, ஒரு தினேரியஸ்-க்கு சமமானது. அதனைப் போன்று திரஹம் பிரஞ்சு நாட்டு ஒரு பிராங் அல்லது அமெரிக்க நாட்டு பத்தொன்பது "சென்டி"ற்கு சமமான மதிப்பு டையதாக இருந்தது. தமிழகத்து நாணயச் செலாவணிக்கு பயன்படுத்தப்பட்ட முதல் நாணயங்கள் அவைகளே கிறித்துவிற்குப் பின்னர் மூன்றாவது நூற்றாண்டுவரை அவைகள் தமிழக நாணயங்களாகப் பயன்படுத்தப்பட்டன என்பதும் அதுவரை தமிழகத்தில் நாணயங்கள் அச்சிடப்படவில்லை