பக்கம்:முஸ்லீம்களும் தமிழகமும்.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.


20

இணைப்பும் பிணைப்பும்

அரபு நாடுகளுடனான தமிழரது வாணிகம், இந்த வளர்ச்சிக்கு ஆக்கமும் ஊக்கமும் வழங்கியது. வணிகர்களாக தமிழகம் வந்த அரேபிய இஸ்லாமியர் நாளடைவில் தமிழக இஸ்லாமியராக மாறியது, தமிழ்ச் சமுதாயத்தில் தலைமுறை தலைமுறையாக பேணப்பட்டு வந்த பண்பாடு, நாகரீகம் ஆகிய நிலைகளில் புதிய கலப்புகளும் வார்ப்புகளும் நிகழ்வதற்கு நெம்புகோலாக உதவின. தமிழக, கலை, இலக்கியம், வாழ்க்கை இயல் சமய ஒழுகலாறுகளில் அவை காலூன்றி பரிணமித்து பிரதிபலித்து நின்றன.

சோழர் ஆட்சிக் காலத்தில் நாகையில் புத்த விகாரமொன்று நிறுவ அனுமதி அளிக்கப்பட்டதை ஆனை மங்கலச் செப்பேடு விவரிக்கிறது. காலப்போக்கில் எத்துணையோ விதமான மதக் கோட்பாடுகள் மக்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டு மன்னர்களால் மதிக்கப்பட்டாலும், இஸ்லாம் மதத்திற்கு ஏற்பட்ட சூழ்நிலையும் ஆதரவும், வேறு எந்த மதத்திற்கும் ஏற்படவில்லை என்று அறுதியிட்டுச் சொல்லலாம். இதயபூர்வமாக இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டவர்கள் சிலரானாலும், இஸ்லாமிய சிந்தனைகளில் ஈடுபாடு கொண்டு எதிர்ப்பு அணியில் சேராதவர் பலர். இஸ்லாத்திற்கு ஆதரவு திரட்ட அனல்வாதம், புனல்வாதம் போன்ற நேரிடையான கொள்கை விளக்கங்களுக்கு அவசியம் ஏற்படவில்லை. இதன் காரணமாக, தமிழ் மண்ணில் ஆழமாக வேரோடிய இந்த புதிய வித்திற்கு தமிழ்ச் சமுதாயம் அனுகூலமான விளைநிலமாகவே விளங்கியது.

தங்கள் வாழ்க்கை நெறியை வல்லவன் வகுத்தருளிய திரு மறையின் படி வகுத்துக் கொண்டாலும், தாங்கள் வாழும்