பக்கம்:முஸ்லீம்களும் தமிழகமும்.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

146

அன்றைய தமிழகத்தில் வாழ்ந்திருந்த இஸ்லாமியர்களுக்கு அரசியலார் பலவித சலுகைகளை அளித்தனர். அவைகளில் சில செப்பேடுகளிலும் கல்வெட்டுக்களிலும் காணப்படுகின்றன. மதுரையில் இரண்டாவது பாண்டியப் பேரரசின் கர்த்தாவாக விளங்கிய சடையவர்மன் சுந்தரபாண்டியன் தனது எட்டாவது ஆட்சியாண்டில் மதுரைக்கு கிழக்கே உள்ள கீட்செம்பி நாட்டின் பெளத்திர மாணிக்கப் பட்டினத்து கீழ்பால் உள்ள சோனக சாமந்தப்பள்ளிக்கு ஆம்புத்துார் முதலான ஊர்களை இறையிலியாக ஆணையிட்டு உதவினான்.[1] அடுத்து, மதுரையில் அரியணை ஏறிய சுந்தரபாண்டியன் மதுரை மாநகர இஸ்லாமியப் பிரதிநிதியான ஹாஜி தாஜுத்தின் அவர்களை காஜியாக அங்கீகரித்ததுடன் அவர்களது குடியேற்றப் பகுதியில் (இன்றைய மதுரை காஜிமார் தெரு) அந்த சிறுபான்மை மக்களது வழிபாட்டிற்கு தொழுகைப்பள்ளி யொன்றையும் நிர்மாணிக்க உதவினான். மேலும் அந்தப் பள்ளியின் பராமரிப்புச் செலவிற்காக விரகனூர், புளியங்குளம், கிராமத்தையும் முற்றூட்டாக வழங்கி உத்திரவிட்டான்.[2] இந்தப் பாண்டியரைப் போன்று சேர மன்னனான உதயமார்த்தாண்டனும், தமிழக இஸ்லாமியர்களுக்கு உதவிய செய்தியும், உள்ளது. அவர் காயல் பட்டினத்திற்கு வருகை தந்தான். அப்பொழுது காயல்துறை சேரநாட்டின் ஆட்சி வரம்பிற்குள் அமைந்திருந்தது. அந்த ஊரின் அண்மையில் உள்ள காட்டு மக்தூம் பள்ளிக்கும் வருகை தந்த விபரம் அங்குள்ள கல்வெட்டில் காணப்படுகிறது. அதன் வாசகப்படி, அந்தப்பள்ளி அன்று முதல் உதயமார்த்தாண்ட பெரும்பள்ளி என அழைக்கப்பட்டதுடன், அந்த பள்ளியின் காதியாரன அபுபக்கரும் உதயமார்த்தாண்ட காதியார் என அழைக்கப்பட்டார். அந்தபள்ளியின் பராமரிப்பிற்காக சோனாடு கொண்டான் பட்டினம் என வழங்கப்பட்ட அந்த காயல்துறையில் ஏற்றுமதி, இறக்குமதி கொள்ளும் பொருளுக்கு, நான்கு பணத்திற்கு கால் பணம் வரியாக வசூலிக்கும்படி சேரமன்னது ஆணையும் பிறப்பிக்கப்பட்டது.[3] இது நிகழ்ந்தது, கி.பி. 1387ல்


  1. AR 116 / 1903 - திருப்புல்லாரிை
  2. Hussaini Dr. S.A.R - History of Pandia Соuntry p. 55
  3. AR 311/1964 காயல்பட்டினம்