பக்கம்:முஸ்லீம்களும் தமிழகமும்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

7

“இருந்ததை” சிலப்பதிகாரமும் “தண்டமிழ் வினைஞர் தம்முடன் கூடிப்பணிபுரிந்த “யவனத் தச்சரை” “மணிமேகலையும்” சுட்டுகின்றன. கி.பி. மூன்றாம் நூற்றாண்டின் துவக்கத்தில் அலக்ஸாந்திரியா பட்டினத்தில் நிகழ்ந்த படுகொலையொன்றின் காரணமாக, அங்கு கிழக்கு மேற்கு நாடுகளின் வணிக மக்கள் நடமாட்டம் குறைந்தது. அத்துடன், ஆடம்பரத்தின் அதீத எல்லையில் இயங்கிக் கொண்டிருந்த ரோமப் பேரரசு கி.பி. 217 ல் வீழ்ச்சி பெறத் தொடங்கியது. அதுவரை கிரேக்க, ரோமர்களுக்கு உதவியாளர்களாக இருந்த அரபிகள், கீழை நாட்டு வணிகத்தை தாங்களே மேற்கொண்டு சிறப்பாக நடத்தி வந்தனர். காரணம் அரபிகளுக்கு வாசனைப் பொருட்களின் மீது இயல்பான ஈடுபாடு இருந்து வந்தது ஆகும். ஆதலால் அவர்களது வாணிகத்தில், புனுகு போன்ற இந்திய நாட்டு வாசனைப் பொருட்களும் இந்திய நாட்டு எஃகினால் தயாரிக்கப்பட்ட போர்வாள்களும் பெரும் இடம் பெற்று இருந்தன.[1] ஆதலால் இஸ்லாம் தோன்றிய ஏழாவது நூற்றாண்டு முதல் யவனர், என்ற தமிழ்ச் சொல் தமிழக இஸ்லாமியரைக் குறிக்க தமிழில் எழுந்த ஒரே சொல் என உறுதியாகிவிட்டது.

இயற்கையாக அமைந்துள்ள உடல்வாகு, ஊட்டம் தரும் உணவுப் பழக்கங்கள், உறுதியான உள்ளம், ஆகிய நல்லியல்புகள் காரணமாக அரபிகள், கடல் தொழிலைச் சிறப்பாக மேற்கொண்டு இருந்தனர். அவர்கள் தொகுத்து வைத்திருந்த புவியியல் செய்திகளும், பல்வேறு நாடுகளின் கடல் வரைபடங்களும், தொன்மையான நூற்களும், அவர்களது திரைகடல் ஓடும் திறமைக்கு தக்க வழிகாட்டிகளாக அமைந்தன. குறிப்பாக, இந்தியாவிற்கு கடல் வழி காணப்புறப்பட்டு, அமெரிக்க நிலப்பரப்பை கண்டுபிடித்த போர்ச்சுக்கல் மாலுமியான கொலம்பஸின் ஆர்வத்திற்கு, முன்னோடியாக இருந்தவை, அரபிகளது புவிஇயல் கொள்கைகளும், கடல் வழி சம்பந்தமான வரைபடங்களுமாகும். அதே ஆர்வத்தினால் உந்தப்பட்டு, ஆப்பிரிக்க பெருங்கண்டத்தை சுற்றி கி.பி. 1498-ல் இந்தியாவின் மேற்குக் கரையை அடைந்த போர்ச்சுக்கீஸிய நாட்டு வாஸ்கோடகாமாவிற்கு கடல்வழி காட்டி வந்தவர் அஹமது இப்னுமஜீது என்ற அரபியர்


  1. Joseph Hell – The Arab Civilization — (Lahore) Page. 78–79