பக்கம்:முஸ்லீம்களும் தமிழகமும்.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

147


பதினேழு, பதினெட்டாம் நூற்றாண்டுகளில் செம்பி நாட்டையாண்ட சேதுபதிகள் தமிழக இஸ்லாமியர்களது தொழுகைப்பள்ளி, தர்ஹா, ஆகியவைகளுக்கு பல நிலக்கொடைகளை வழங்கினர். அந்த அறக்கொடைகள் தொடர்ந்து தற்பொழுதும் பயன்பட்டு வருகின்றன. அதன் விபரங்களை சேதுபதிகளின் செப்பேடுகளும் கல்வெட்டுகளும் விளக்குகின்றன. மறவர் சீமையின் மாண்பை உயர்த்திய சேது மன்னர்களில் சிறப்புற்று விளங்கிய திருமலை சேதுபதி, தமது நாட்டில் குணங்குடி கிராமத்தில் (இராம. மாவட்டம் திருவாடானை வட்டம்) அமைந்துள்ள ஸையது முகம்மது புஹாரி (வலி) அவர்களது தர்ஹா (அடக்கவிடம்) பராமரிப்பிற்காக கி.பி. 1675இல் நிலகொடை வழங்கினார்.[1] அவரை அடுத்து அரியணையேறிய கிழவன் ரகுநாத சேதுபதி காரேந்தல் (காமராசர் மாவட்டம் திருச்சுழியல் வட்டம்) மீராசாகிப் பள்ளிக்கு விளைநிலங்களை விட்டுக் கொடுத்தார். மற்றொரு சேது மன்னரான முத்துக்குமார விஜயரகுநாத சேதுபதி கி.பி. 1744ல் குணங்குடி பள்ளிவாசலுக்கு மேலும் பல நிலங்களை வழங்கினார்.[2] இதே சேது மன்னர் தமது சீமையில் உள்ள ஏனைய இஸ்லாமியரது புனித இடங்களான இராமேஸ்வரம் ஆபில் காபில் தர்ஹா, இராமநாதபுரம் ஈசா சாகிபு தர்ஹா, ஏறுபதி சுல்தான் சையது இபுராகிம் (வலி) தர்ஹா ஆகிய நிறுவனங்களுக்கு முறையே பக்கிரி புதுக்குளம், (இராம. வட்டம்) கிழவனேரி, ஏறுபதி, மாயாகுளம் ஆகிய கிராமங்களை (முதுகுளத்துார் வட்டம்) முற்றூட்டாக வழங்கியுள்ள செய்திகள், அவரது தான சாசனங்களில் வரையப்பட்டுள்ளன.[3] மேலும், இவர் கமுதி வட்டம் பூலாங்கால் பள்ளிவாசலுக்கும், இராமநாதபுரம் வட்டம் நாரணமங்கலம் சுல்தான் பள்ளி வாசலுக்கும், பல ஏக்கர் விளைநிலங்களை வழங்கி பள்ளிவாசல் தர்மத்திற்கு உதவி இருக்கிறார்.[4] இவரை அடியொற்றி இவரது வழியினரான முத்து விஜயரகுநாத சேதுபதியும் பூலாங்கால் பள்ளி வாசலுக்கு நிலக்கொடைகளை வழங்கி உள்ளார்.


  1. Sevvell - List of Copper plates
  2. Antiquities vol I. p. 298.
  3. சேதுபதி மன்னர் செப்பேடுகள்.
  4. இராமநாதபுரம் சமஸ்தான நிலமான்ய கணக்கு.