பக்கம்:முஸ்லீம்களும் தமிழகமும்.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

150

வழங்க ஏற்பாடு செய்ததாகும். அத்துடன் கோயம்புத்து ருக்கு அருகில் உள்ள குறிச்சி என்ற ஊரில் உள்ள செல்லாண்டி அம்மன் கோயிலுக்கும் அவர் பல மானியங்களை வழங்கி உள்ளார்.[1] மேலும், அவர் பூரீரங்கப்பட்டினம், பெருமாள் கோயில், சிருங்கேரி சாரதா பீட மடம், குருவாயூர் கிருஷ்ணன் கோயில், ஆகிய சமய சார்புடைய நிறுவனங்களுக்கு அளித்துள்ள தானங் களை இங்கு குறிப்பிடுதல் பொருத்தமுடையதாகவும்.[2] அவையனைத்தையும் ஒன்று சேர இணைத்துச் சிந்தித்தால், திப்பு சுல்தானைப் பற்றி தமிழ்நாட்டில் உலவுகின்ற ஒரு சில கட்டுக் கதைகளை சுட்டெரித்துவிடும் சரித்திரச் சான்றுகள் இவையென்பதை உணரமுடியும். அத்துடன் சிறந்த பேரரறிஞரும் விடுதலை வீரருமான அந்த மன்னனை, மக்கள் மத்தியில் இழிவு படுத்துவதற்காக அவரது பரம வைரிகளான வெள்ளைப் பரங்கிகள் திரித்துவிட்ட பொய்மைச் சரடுகள் அவை என்பதும் புலப்படும்.

தில்லிப் பேரரசரது பிரதிநிதியாக தமிழ்நாட்டை ஆட்சி செய்த ஆற்காடு நவாப்களில் ஒருவரான அன்வர்திகான், திருநெல்வேலி காந்திமதி அம்மன் ஆலயத்தில் சுவாமி திருமேனி ஒன்றைச் செய்வித்து உதவினார். இன்னும் அந்ததிருமேனி ஆற்காட்டு நவாப்பை நினைவூட்டும் வகையில் “அனவரநாதன்" என வழங்கப்பட்டு வருகிறது.[3] இதனைப் போன்ற திருவுத்திர கோசமங்கை திருத்தலத்தில் எழுந்தருளியுள்ள தென்னாடுடைய சிவனுக்கு, திருவாட்சி இல்லாத குறையை நீக்கி, மதுரை முகம்மது இசுமாயில் என்ற இஸ்லாமிய குடிமகன் எட்டு அடி உயர வெங்கல திருவாட்சியை தயாரித்து வழங்கி இருக்கிறார்.[4] அந்த ஆலயத்தில் பழமையான சிறப்புப் பொருட்களில் ஒன்றாக அந்த திருவாட்சி இன்றும் காட்சி அளித்துக் கொண்டு விளங்குகிறது. இத்தகைய சமய பேதங்கள் நீங்கிய நட்புச் சூழ்நிலையில் தமிழக இஸ்லாமியர்கள், வாழ்ந்த வாழ்க்கை நிகழ்ச்சி சில வற்றை வரலாறு நமக்கு நினைவுறுத்திக் கொண்டிருக்கிறது.


  1. Rangacharya - List of inscriptions vol. II.
  2. Bowring – Haider and Tippu.
  3. ஆயிசா பேகம் - தமிழ்நாட்டு வரலாற்றுக் கருத்தரங்கு (1979) பக் : 295
  4. மதுரை செய்யது இசுமாயில் சாயபு - சகம் 1706ல் (1784). திருவாட்சியை வழங்கியது அதில் பொறிக்கப்பட்டுள்ளது.