பக்கம்:முஸ்லீம்களும் தமிழகமும்.pdf/164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

151

கி.பி. 1311 ல் தென்னாட்டு அரசியலில் குழப்பம் நிலவியது. பாண்டியப் பேரரசு தளர்ந்து மெலிந்த சிம்மத்தைப் போன்று பெருமூச்சு விட்டுக் கொண்டிருந்தது. தாயாதிச் சண்டைகள் குடுபிடித்து, தங்களது கட்சிக்கு வெளி உதவியை நாடிக் கொண்டிருந்த நேரம், அப்பொழுது தில்லி பேரரசரின் தளபதி மாலிக் நாயிப் கர்நாடகத்தில் துவார சமுத்திரத்தில் ஹொய்சாள மன்னருடன் போரில் ஈடுபட்டிருந்தான். மதுரை அரசு கட்டிலைப் பெற சுந்தரபாண்டியன் தில்லியில் அலாவுதின் அவைக்குச் சென்று உதவி கோரினான். சுந்தரபாண்டியனுக்கு உதவ தில்லி தளபதிக்கு கட்டளை அனுப்பப்பட்டது. தில்லிப் படைகள் மதுரை நோக்கிப் புறப்பட்டன. வழியில் கண்ணனுார், கொப்பத்தில் வீரபாண்டியன் படைகளை, தில்லி தளபதி மாலிக் கபூர் போரில் சந்தித்தான். தோல்வியுற்றான். கைது செய்யப் பட்ட வீரபாண்டியனது வீரர்கள், தில்லி தளபதி முன்பு கொண்டு வரப்பட்டனர். அவர்களில் பெரும் அளவில் தமிழக இஸ்லாமியர்களும் இருப்பதை அறிய தளபதிக்கு கோபம் பொங்கி வழிந்தது. தான் ஒரு முஸ்லீம் என்பதை அறிந்தும் தனக்கு உதவாமல், தனக்கு எதிராக, இந்து மன்னனான வீரபாண்டியனுக்காக போரிட்ட “இனத்துரோகிகள்” என அவர்களைக்கருதி கொன்று விடும்படி உத்தரவிட்டான். அந்த வீரர்களும், தாங்கள் எதிரியின் வாளால் மடியவிருப்பது உறுதி என உணர்ந்து, எஞ்சிய சில வினாடிகளையும் இறைவனது சிந்தனையில் கழிக்க இஸ்லாமிய தாரக மந்திரத்தை (லா இலாஹ இல்லல்லாஹீ) முணு முணுத்தனர். இறைவன் ஒருவன் என்ற அந்த ஏகத்துவ முழக்கம், தளபதியின் உள்ளத்தில் அச்சத்தை ஊட்டியது. இஸ்லாமியன் ஒருவன் பிறிதொரு இஸ்லாமியனை எதிரியாகக் கருதாமல் உடன்பிறந்த சகோதரனாகக் கருதவேண்டும் என்ற சமய உணர்வு மேலிட அவர்கள் அனைவரையும் உடனே விடுதலை செய்து ஆணையிட்டான். இதனை நேரில் கண்ட வரலாற்று ஆசிரியர் “அமிர்குஸ்ரு” வீர பாண்டியனுக்காகப் போரிட்ட தமிழக இஸ்லாமியர் தோற்றத்தில் வேறு பட்டவர்களாக இருந்தாலும், இஸ்லாத்தினின்றும் மாறுபட்டவர்களாக இல்லாததாலும் இஸ்லாமிய தாரக மந்திரத்தை முழக்கியதாலும் உயிர்பிழைத்தனர் என குறிப்பிட்டுள்ளார்.[1]


  1. Elliott—History of India - vol Ill p. 90.