பக்கம்:முஸ்லீம்களும் தமிழகமும்.pdf/165

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

152


பதினாறாவது நூற்றாண்டின் துவக்கத்தில் கிழக்கு கடற்கரையில் போர்த்துகேசியரின் செல்வாக்கும் பிடிப்பும் வலுத்திருந்தது. காரணம் அப்பொழுது மதுரையை மையமாகக் கொண்டிருந்த விஜயநகர நாயக்கர் பிரதிநிதிகள் கடல் கரைப் பகுதிகளில் கவனம் செலுத்தவில்லை. கப்பற்படை அவர்களிடம் இல்லாததும் அதற்கு முக்கியமானதொரு காரணமாகும். கிழக்கு இராமநாதபுரம் பகுதியில் தங்கள் சமயப் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த போர்த்துகேசியர், வேதாளையில் ஒரு மண் கோட்டையொன்றைக் கட்டி அங்கு ஒரு படையணியை நிலை கொள்ளுமாறு செய்தனர். அத்துடன் அதற்கு அண்மையில் இராமேஸ்வரம் சாலையில் ஒரு அகழியையும் தோண்டி, இராமேசுவரம் செல்லும் பயணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தியவுடன் அவர்களிடம் சங்கம் வசூலித்து வந்தனர். அதனால் பயணிகளுக்கு தொந்தரவு மற்றும் இராமேசுவரத்தில் உள்ள குருக்களது வருமானமும் பாதிக்கப்பட்டது.

இதனை நிவர்த்தி செய்ய வந்த நாயக்கர் படையுடன், அங்குள்ள இஸ்லாமியரும் பெரும் அளவில் சேர்ந்து கொண்டு போர்த்துக்கேசியருக்கு எதிராகப் போரிட்டதும், அவர்களை அழித்து வேதாளையை விட்டு அவர்கள் கடல் மார்க்கமாக ஒடுமாறு செய்தனர். இராமேஸ்வரம் யாத்திரை செல்லும் பயணிகள் சிரமம் நீங்கியது. இது நிகழ்ந்தது. கி.பி. 1549ல்.

தமிழகம் போந்த இசுலாமிய மனிதப் புனிதர்களில் முக்கியமானவர் நாகூர் சாகுல் ஹமீது ஆண்டகையார். பதினைந்தாம் நூற்றாண்டில், தமிழகத்தில் அன்பையும், சகோதர உணர்வையும் மக்களிடையே தளிர்க்கச் செய்தவர்கள் அவர்கள். செயற்கரிய செய்வர் பெரியர் என்ற வள்ளுவத்துக்கு எடுத்துக் காட்டாக வாழ்ந்து சமுதாயத்தின் சகல துறைகளிலும் ஏக தெய்வ நம்பிக்கையும், சகிப்புத்தன்மையும், கமழச் செய்த சான்றோர். அவரது இளவலான பாபா பக்ருத்தீனும் மறை வழி நின்று மனித நேயம் காத்து வந்தார். ஒரு சமயம் சேது நாட்டிற்கும் சோழநாட்டிற்கும் இடைப்பட்ட கானாட்டில் அவர் தங்கி இருந்த பொழுது, அந்த வழியில் தஞ்சையில் இருந்து இராமேசுவரம் தலயாத்திரை சென்ற அந்தணப் பெண் மணிகள் எழுவரை ஆறலைக் கள்வர்கள் வழிமறித்தனர். நிராதரவாக நின்று தவித்த அவர்களது நிலை கண்டு நெஞ்சுருகிய