பக்கம்:முஸ்லீம்களும் தமிழகமும்.pdf/172

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

159


இந்த நிகழ்ச்சியை சற்று ஆழமாகச் சிந்தித்தால் சில உண்மைகள் தெளிவாகும். மதுரை மீனாட்சியின் திருமணம் என்பது ஹலாஸ்ய புராணத்தில் விவரிக்கப்படும் நிகழ்ச்சியாகும். புராண நிகழ்ச்சிகளுக்கு வரலாற்று வரம்பு எதுவும் இடையாது. கி.பி 1623 க்கு முன்னர் அழகர் மலைக்கோவிலில் இருந்து அழகர் பெருமாள் ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதத்தில் புறப்பட்டு தேனூர் சென்று வரும் தீர்த்தவாரி வழக்கம் இருந்தது. இந்த நிகழ்ச்சியை மதுரைச் சித்திரைத் திருவிழாவாக மாற்றியமைத்தவர் மன்னர் திருமலை நாயக்கர் ஆவார். மதுரை வட்டாரத்தில் பெரும்பாலான மக்கள் ஆடிமாதத்தில் விவசாயப் பணிகளில் ஈடுபட்டிருப்பதால் விழாவிற்கான மாதமாக வசந்தகால சித்திரையையும், விழா நடக்கும் ஊரான தேனூருக்குப் பதில் தமது கோநகரான மதுரையையும் அவர் தேர்வு செய்து மாற்றியமைத்தார். இத்தகைய அண்மைக்கால நிகழ்ச்சியில், "துலுக்கச்சி நாச்சியார்" என்ற பாத்திரத்தை புராணக் கடவுளான அழகர் பெருமாளுடன் இணைத்து இருப்பது தமிழகத்து சமுதாய நிலையில் சமூக ஒற்றுமையைப் பேன வேண்டும் என்ற முன்னவர்களது உயரிய நோக்கம் போலும்! இதனைப் போன்ற இன்னொரு நிகழ்ச்சி, திருவரங்கம் திருக்கோயில் சம்பந்தப்பட்ட தொன்றதாகும். அத்துடன் சித்திரைத் திருவிழாச் சம்பந்தப்பட்ட துலுக்கச்சி நாச்சியார் கதைக்கு உரிய கருவும்கூட. இந்தக் கோவிலின் மூலவர் ரங்கமன்னாரது (அழகிய மனவாளர்) பொன்னாலான திருமேனி கி. பி. 1311 ல் நிகழ்ந்த மாலிக்கபூர் படையெடுப்பின் பொழுது ஏனைய அணி மணிகளுடன் கொள்ளைப் பொருளாக தில்லிக்கு எடுத்துச் செல்லப்பட்டதாக அந்தக் கோயிலின் ஒழுகுச் செய்தி அறிவிக்கிறது.[1] ரங்க மன்னாரது திருமேனியை நாள்தோறும் தரிசித்து மகிழ்ந்த சேவிகை ஒருத்தி திருவரங்கம் அண்மையில் உத்தமர் கோயிலில் வாழ்ந்து வந்தாள். ரங்க மன்னார் திருமேனி எடுத்துச் செல்லப்பட்டதை அறிந்து, அதனை மீட்டுவதற்காக தக்க துணையாக அறுபது பேர்களை திரட்டி தில்லி சென்றாள். அங்கே தில்லி பாதுஷாவை தமது ஆடல் பாடல்களாலும், "ஐக்கினி" என்ற களியாட்டத்தினாலும் அகமகிழச் செய்து தங்க மன்னார் திருமேனியை பரிசுப் பொருளாக பெற்றுத்


  1. Hari Rao, V. – KOIL OLUGU (1961 ) p. 25