பக்கம்:முஸ்லீம்களும் தமிழகமும்.pdf/173

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

160

திரும்பினாள்.[1] இந்த சேவிகை “பின் சென்ற வல்லி” என வழங்கப்படுகிறார். இந்த வரலாற்றின் இன்னொரு பகுதி சுவை மிகுந்ததாக இருக்கிறது.

ரங்க மன்னாரது திருமேனி தில்லியில் இருந்த பொழுது அதனைத் தனது விளைாட்டுப் பொருளாகக் கொண்டிருந்த பாதுஷாவின் மகள் நாளடைவில் அந்த திருமேனியின் அழகில் மயங்கி மானசீகக் காதல் வயப்பட்டு இருந்தாள். தனக்கு தெரியாமல், தனது தந்தையார் அந்த திருவுருவச் சிலையை ஜக்கினி ஆட்டக் குழுவினருக்கு பரிசுப் பொருளாக வழங்கி விட்டதை அறிந்து ஆறாத் துயரடைந்தாள். அதே அவல நிலையில் அவளது உயிர் பிரிந்து விடுமோ என அச்சமுற்ற டில்லி பாதுஷா அதனை மீண்டும் தேடிப் பெறுவதற்கு தில்லியிலிருந்து தெற்கே ஒரு படையணியை இளவரசியின் பொறுப்பில் அனுப்பி வைத்தார். தங்களை இளவரசி தொடர்ந்து வருவதை அறிந்த பின் சென்று வல்லியினது சகாக்கள் ரங்கமன்னாரை திருவரங்கத்திற்கு கொண்டு செல்லாமல் வழியில் திருப்பதி மலையில் மறைத்து வைத்துவிட்டனர். ஆனால் நேரடியாக திருவரங்கம் சென்ற தனது முயற்சியில் தோல்வியுற்ற இளவரசி, திருவரங்கத்தில் காத்து இருந்து மரணமடைந்ததாக அந்தக் கோயில் ஒழுகு கூறுகிறது.[2] இந்த புதிய "ராதையின்" திருவுருவை திருவரங்ககோயிலில் கருவறைக்கு வெளியே உள்ள மைய மண்டபத்தின் வடகிழக்குப்பகுதியில் ஒவியமாக அமைத்து நாள் தோறும் உரிய வழிபாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இந்த "தில்லி நாச்சியாருக்கு" கோதுமை ரொட்டியும், இனிப்பு சுண்டலும் பருப்பு பாயாசமும், சிறப்பாக படைக்கப்பட்டு வருகிறது. இத்தகைய வழிபாடு திருப்பதி திருக்கோயிலிலும் நடைபெற்று வருகிறது. இவள் “சாந்து நாச்சியார்” “பீவி நாச்சியார்” “துலுக்க நாச்சியார்” என வைணவர்களால் பேதமில்லாமல் பெருமிதத்துடன் வழங்கப்பட்டு வருகிறார். ரங்க மன்னார் திருமேனி திருவரங்கத்தைவிட்டு அந்நியர் படையெடுப்பின் பொழுது மூன்று முறை வெளியூர்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டதிலும்,


  1. Krishnasamy Ayyangar Dr. S. - History of South India and Mohammedan Invaders (1928) p. 114.
  2. Hari Rao V. – Koil Olugu (1961) p. 27