பக்கம்:முஸ்லீம்களும் தமிழகமும்.pdf/177

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

164

களில், மத்திய ஆசிய இஸ்லாமியரது கலைத் திறனும், கீழை நாட்டு திராவிட கலைப் பண்பாடுகளும் இணைந்து நிலை கொண்டன. சோழர்களால் துவக்கப்பட்ட குடவரை, செங்கப் படை, சிறு கற்றளி, குடவரை அமைப்புக்கள், பிற்கால பல்லவர், பாண்டியர், நாயக்கர், பாணியில் எழுநிலை மாடங்களுடன் கூடிய விண்ணகரங்களாக உயர்ந்தன. ஆனால், இந்தச் சோனகர்களது பாணியிலான கட்டுமானங்கள் அளவில் சிறியவையாகவும் அழகில் சிறந்தனவாகவும் அமைந்தன. குறிப்பாக இந்த கட்டுமானங்களின் “வளைவுகள்”. "உள்ளொடுங்கிய விதானங்கள்" உப்பரிகை மாடங்கள் போன்ற உத்திகள் புதுமையானவையாக தோற்றுவிக்கப்பட்டன. தமிழக கட்டுமானங்களில் அதுவரை அவை இடம் பெற்று இருக்கவில்லை.

பொதுவாக தமிழக கட்டுமானங்களில் - வாயில், முகப்பு, சாளரம் போன்ற அமைப்புகள் நேராக நிறுத்தப்பட்ட இரண்டு சட்டங்கள் நிலைகளுக்கிடையில் பிறிதொரு சட்டத்தை குறுக்கில் இணைத்து பொருத்தப்பட்டன. இவை தலைகீழாக எழுதப்பட்டுள்ள “ப” எழுத்துப் போன்று (Π) காட்சியளித்தன. இத்தகைய, இணைச்சட்டம் இல்லாமல் அமைக்கப்படும் கட்டிடங்களை கும்பாஸ் அல்லது கும்பா என்று அழைப்பது உண்டு. இந்த முறையில் நிர்மாணிக்கப்பெறும் கட்டிடங்களது உட்பகுதி காற்று அழுத்தம், காற்றுக்குறைவு அல்லது புழுக்கம் ஆகியவைகள் குறைந்ததாக இருந்தது. மேலும், இத்தகைய கட்டிடங்களின் பக்கவாட்டுச் சுவர்களுக்கு பாரமான கற்பாளங்களைத் தாரிசாகத் தாங்க வேண்டிய நிர்பந்தமும் குறைவு. இந்த கட்டுமானங்களில் பிறிதொரு முறையும் கையாளப்பட்டது. அவைகளில் வளைவு அல்லது குதிரை லாட வளைவு எனப்படுவதாகும்.

துவக்கத்தில் இந்த வளைவான அமைப்புகள் தமாஸ்கஸ் நகரப் பள்ளிவாயிலில், கி.பி. 705ல் அல்வாலித் என்ற இஸ்லாமிய சிற்பியால் ஏற்படுத்தப்பட்டன.[1] பிறகு இஸ்லாமியர் ஒன்பதாம் நூற்றாண்டில் ஸ்பெயின் நாட்டை வெற்றி கொண்டு ஆட்சி செய்த பொழுது, அங்கு இந்த முறை பரந்த அளவில் கடைப் பிடிக்கப்பட்டது. காலத்தையும் வென்று காட்சியளித்துக் கொண்டிருக்கும் அந்தக் கலைப்பேழைகளான கட்டிடங்களை இன்றும்


  1. Philip K. Kitti – History of Arabs (1977) p. 265