பக்கம்:முஸ்லீம்களும் தமிழகமும்.pdf/178

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

165

ஸ்பெயின் நாட்டின் நகரங்களான கிரானடா, செரவில், கார்டபோ ஆகிய நகரங்களில் கண்ணாரக் காணலாம். ஐரோப்பிய பிரபுக்கள் மாளிகைகளிலும் தேவாலயங்களிலும் இந்தப் புதிய முறை “மூரிஸ் பாணி” என்ற பகுப்புடன் பின்பற்றப்பட்டது. அங்கிருந்து உலகின் பல நாடுகளிலும் இந்த புதிய முறை, கட்டுமானங்களில் பின்பற்றப்பட்டது. ஸிரிய - எகிப்திய, இந்திய - பெர்ஸிய, இந்திய-சீன பாணிகள் எனக் குறிக்கப்பட்டவைகளில் இவை ஊடுருவி நிற்கின்றன. ஏற்கனவே அந்தந்தப் பிராந்தியங்கள், நாடுகளின் நடைமுறையில் உள்ள கட்டுமான முறையில், இஸ்லாமியரது இந்தப் புதிய உத்திகளும் கலந்து பொலிவதுதான் மேலே சொன்ன பாணி அல்லது பகுப்பு என்பதாகும். நமது நாட்டுக் கட்டுமானங்களை பொறுத்த வரையில், ஆசிரியர் ஜான் மார்ஷல், “இந்த இரு வகையான பாணிகளுக்கும் பொதுவான இணைப்பை ஏற்படுத்துகின்ற ஆதாரமான தன்மை, இஸ்லாமிய இந்து கலை அழகை உள்ளடக்கியவை என்ற உண்மைதான்.

ஒன்றைப்போன்று மற்றொன்றிலும் அலங்காரம் முதன்மையானது. இருமுறைகளும் தங்களது மாட்சிக்கு அதனையே சார்ந்துள்ளன.”எனக் குறிப்பிட்டிருப்பது இங்கு சிந்திக்கத்தக்கதாக உள்ளது. வானளாவிய கோபுரம் போன்ற கட்டுமானங்களில் “மினாரத்” என்ற புதிய அமைப்பும் இஸ்லாமிய கட்டுமான முறையாகும். இந்த மினாராக்கள் தரைமட்டம் முதல் சிகரம் வரை ஒரே சீராகவோ அல்லது கீழிருந்து மேலே செல்லச் செல்ல குறுகலாகவோ அமைப்பதும் உண்டு. அதற்கான உள் கூட்டு பாதையும் மினாராவிற்குள்ளாக அமைக்கப்பெறும். இந்த வகை ஸ்துாபிகளை பள்ளிவாயில்களில் முதன் முறையாக கி.பி. 673இல் பயன்படுத்தியவர் கலிபா முஆவியா என்பவர். இந்தக் கட்டுமானங்களில், வண்ணமும் அழகும் பொருந்தி வழிந்து நிற்பதற்கான புதிய வகையொன்றையும் அவர் ஏற்படுத்தினார். மேலும் கட்டுமான அலங்காரங்களில் மனித, மிருக தோற்றங்களை சேர்த்தல், இசுலாமிய கோட்பாடுகளுக்கு . முரணானதென்ற காரணத்தால் அவைகளை தவிர்ப்பதற்கு வண்ணக் கண்ணாடிகளைப் பதித்து அழகுப்படுத்தும்முறை "மொஸாயிக்” என வழங்கப்பட்டது. இந்த முறை கி. பி. 684ல் அல் ஸூபைர் என்பவரால் புகுத்தப்பட்டது.[1]


  1. பிறையன்பன் - கலையும் பண்பாடும் (1962) பக் 99