பக்கம்:முஸ்லீம்களும் தமிழகமும்.pdf/179

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

166


மேலே கண்ட புதிய அமைப்பு முறைகளைக் கொண்ட பள்ளி வாயில்களையும் தர்காக்களையும் தமிழகத்து இஸ்லாமியர் அப்பொழுது பெரும்பான்மையினராக வாழ்ந்த பட்டினங்களில் நிர்மானித்து வந்தனர். ஆனால், அவைகளை இன்று காண்பது அரிதாக உள்ளது. எனினும், காலத்தின் சீற்றத்திற்கும், ஆட்சியாளரின் அழிமானத்திற்கும் அப்பாற்பட்டதாக, இன்றும் நிலைத்துள்ள சில தொன்மையான அமைப்புகளை இங்கு பார்ப்போம். திருச்சிராப்பள்ளியில் உள்ள பழமையான பள்ளிவாசல் ஒன்றில் இஸ்லாமியரின் வில் வளைவுகளைக் காணலாம். இந்தப் பள்ளிவாயில் கி. பி. 714ல் நிர்மணிக்கப்பட்டது.[1] திருச்சிராப்பள்ளி கோட்டை ரயில் நிலையத்திற்கு அண்மையில் இன்று சிதைந்த நிலையில் இந்தப் பள்ளிவாசல் காட்சியளித்துக் கொண்டிருக்கிறது. அந்தக் காலக்கட்டத்தில் பிரபலமாக இருந்த அமணப் பள்ளியின் வடிவில், மிகவும் சிறியதாக முழுவதும் கல்லினால், அமைக்கப்பட்டுள்ளது. ஹாஜி அப்துல்லா-பின்-ஹாஜி அன்வர் என்பவரால். அப்பொழுது அங்கு சிறுபான்மையினராக வாழ்ந்த இஸ்லாமியரது வழிபாட்டுத் தலமாக அந்தப்பள்ளி நிர்மாணிக்கப்பட்டதாக தெரிகிறது. இஸ்லாமிய கட்டுமானக் கலையின் ஒரு சிறு பிரதிபலிப்பு இந்தப்பள்ளியின் அமைப்பு என்று இதனைக் கொள்ளலாம்.

இன்னொரு பழமையான பள்ளி, தமிழக வரலாற்றில் குறிப்பிடப்பட்டுள்ளது. “கீட் செம்பி நாட்டு பவித்திர மாணிக்கப் பட்டினத்துக்கீழ்பால் சோனக சாமந்தப்பள்ளி” யாகும். பிற்காலப் பாண்டியரது பேராதரவில் சிறந்து இருந்த சோனகர் ஒருவர் நிர்மாணித்த இந்தப் பள்ளிக்கு, நிவந்தமாக ஆம்புத்துார், மருதுார் முதலிய கிராமங்களை திருப்புவனச் சக்கரவர்த்தி கோனேரின்மை கொண்டான் என்ற பாண்டியப் பேரரசன் கி.பி. 1276ல் வழங்கிய ஆணையொன்றில் இந்தப் பள்ளி குறிக்கப்பட்டுள்ளது.[2] கொழும்புவிலிருந்து மாலத்தீவு நோக்கி பயணமான உலகப் பயணி இபுனுபதூதாவின் கப்பல் மன்னார் வளைகுடாவில் பாறை ஒன்றில் மோதி பயணம் தடைப்பட்டதால்


  1. ஹமீது கே.பி.எஸ். - இரண்டாவது இசுலாமிய தமிழ் ஆராய்ச்சி மாநாட்டு மலர் (1973) பக். 308 310
  2. A.R. 116/1903 திருப்புல்லானி.