பக்கம்:முஸ்லீம்களும் தமிழகமும்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

9

10. பாராவ்  ஒரே மரத்தாலானது
11. பணி  கட்டைமரம் மீன்பிடித்தலுக்கு
12. கங்யல்  வள்ளம் மீன்பிடித்தலுக்கு
13. டெராதா  ... கரையோர உபயோகம்
14. ஜம்புகுவா  ... பெருங்கடல் நாவாய்

இவைகளைத் தவிர, சீனநாட்டினரது மரக்கல வகைகளான ஜங்க், ஜாவ், காகாம் போன்ற பெருங்கப்பல்களும் அவர்களால் பயன்படுத்தப்பட்டன. அவையனைத்தும் ஆழ்கடலில், பெருங்காற்றினுாடே செல்லத்தக்கன. ஆயிரத்திற்கு அதிகமான மாலுமிகளும், பயணிகளும் பயணம் செய்யும் வகையில் இவைகள் அமைக்கப்பட்டன. இந்தக் கலங்களின் உதவியால் அரபிய நாட்டின் தென்முனை ஸியாகரஸிலிருந்து நாற்பது நாட்களில் மலையாளக் கரையில் உள்ள கொல்லத்தையும், அங்கிருந்து ஏழு நாட்களில் தமிழகத்தின் கிழக்குக் கரைப் பட்டினங்களையும் வந்தடையலாம். மேலும், முப்பது நாட்களில் கடாரத்தையும் (மலேஷியா) அங்கிருந்து நாற்பது நாட்களில் சீனத்தின் கான்டன் நகரையும் அடைய முடியும். கி.பி. நான்காம் நூற்றாண்டிலேயே அராபியர்களது குடியிருப்பு கான்டனில் இருந்தது.[1] அராபிய நூலாசிரியர் சுலைமான், எட்டாம் நூற்றாண்டில் கான்டன் நகருக்குச் சென்று, அங்கு ஏராளமாக குடியேறி வாழ்ந்த இஸ்லாமியர் வாழ்க்கை நிலை, அவர்கள் நிறை வேற்றிய ஐந்து நேரத் தொழுகை, வெள்ளிக்கிழமை சிறப்புத் தொழுகை - ஆகியவைகள் பற்றி குறிப்பிட்டுள்ளார். மேலும் அங்கு சட்டத்தை அமுலாக்கவும், நிர்வாகத்தை இயக்கவும், இஸ்லாமியர்களை சீனர்கள் நியமனம் செய்து இருந்ததையும் அவர் குறித்துள்ளார்.

இங்ஙனம், உலகின் கீழ்க்கோடியான சீனத்துடன் தொடர்பு கொண்டிருந்த அராபியர், தென்னகத்திலிருந்து சீனம் செல்லும் வழியில் கடாரம், ஜாவா, சுமத்திரா, அன்னாம் ஆகிய வலிமை மிக்க நாடுகளின் கடல் பட்டினங்களைத் தொட்டுச்


  1. Nilakanta Sastri - K.A. – Foreign Notices of South India(Madras 1952) p. 20.