பக்கம்:முஸ்லீம்களும் தமிழகமும்.pdf/183

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

170

அடுத்து, குறிப்பிடப்பட வேண்டிய பள்ளி, கீமுக்கரையில் உள்ள ஜாமியா மஸ்ஜிது என அழைக்கப்படும் தொழுகைப் பள்ளியாகும். அங்கு தொழுகைப் பள்ளிகள் பல இருந்த பொழுதிலும், வரலாற்றுச் சிறப்பும் கட்டுமானச் செறிவும் கலந்து விளங்குவது - இந்த பள்ளிவாசல் ஒன்றேதான். ஏன் தமிழகத்திலேயே இத்தகைய கலைப் பேழையாக விளங்கும் பள்ளிவாசலை வேறு எங்கும் காண முடியாது! பதினேழாம் நூற்றாண்டின் திராவிட கட்டுமான பணிக்கு கட்டியம் கூறும் இந்தக் கலைப் படைப்பை இஸ்லாமிய உலகிற்கு காணிக்கையாகத் தந்தவர் காலமெல்லாம் புகழப்படுகிற வள்ளல் சீதக்காதி என்ற ஷெய்கு அப்துல் காதர் மரைக்காயரும் அவரது இளவல் பட்டத்து அபுபக்கர் மரக்காயரும் ஆவர். நீண்ட சதுர வடிவில் நான்கு சுவர்களும், இருபத்து நான்கு தூண்களும், விதானமும் - அனைத்தும் நல்ல வெள்ளைப்பாறைக் கல்லால் வடிவமைக்கப்பட்டு விளங்குகின்றன. ஆலயங்களில் உள்ள திருச்சுற்றாலை போன்று கம்பீரமாகக் காட்சியளிக்கும் இந்த அமைப்பில், சிற்பிகளின் கைத்திறன் சிற்றுாண்கள் சாளரம், அனைத்திலும் கனிந்து ஒளிர்கின்றது. இவைகளில் இஸ்லாமிய சமய கோட்பாடுகளுக்கு இணங்க உருவங்கள் எதுவும் இல்லாமல் மலர்கள், கொடிகளுடன் அமைக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத் தக்கதாகும்.

வரலாற்றுத் தொடர்புடைய இன்னொரு இஸ்லாமிய கட்டுமானம் நாகூரில் உள்ள புனித சாகுல்ஹமீது ஆண்டகையின் அடக்க இடமாகும். இந்த இறைநேசரிடம் முழுமையாக, ஆன்ம பூர்வமாக ஈடுபட்டு, அடிமையாகிவிட்ட, தஞ்சை மன்னர் பிரதாபசிங், இந்தக் கட்டிடத்தை நிலையான அன்புக் காணிக்கையாக அமைத்து முடித்து இருக்கிறார். அங்கு காணப்படும் கல்வெட்டு ஒன்றிலிருந்து இந்தக் கட்டுமானம் முழுவதும் பதினேழு நாட்களில் கி.பி. 1757 ல் அமைத்து முடிக்கப்பட்டதாகத் தெரிகிறது.[1] இவ்வளவு குறுகிய காலத்தில் அமைக்கப்பட்ட இந்த பிரமாண்டமான கட்டுமானத்தில் கலை நுணுக்கமான உத்தி எதனையும் எதிர்பார்த்தல் இயலாத ஒன்று. என்றாலும், இந்த தர்காவை ஒட்டி எழுப்பட்டுள்ள ஏழு கொடி மாடங்களும்


  1. Sewell - List of Copper plates