பக்கம்:முஸ்லீம்களும் தமிழகமும்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

10

சென்றனர். அத்துடன் அந்தந்த நாடுகளின் செல்வங்களான வெள்ளி, ஈயம், தகரம், பட்டு, மட்பாண்டங்கள், நறுமணப் பொருட்கள், ஆனைத்தந்தம், காண்டாமிருக கொம்பு, ஆமை ஓடுகள், பவளம், அம்பர், இரும்புத் தாதுக்கள், பாறைப் படிவங்கள், கைத்தறி ஆடைகள், கருங்காலி, சூடன் மரங்கள் ஆகியவைகளையும் எடுத்துச்சென்றனர்.[1] இந்தக் கொள்முதல் பொருட்களுக்கு, பண்டமாற்றில் தங்களது சொந்தநாட்டு நெசவுத்துணிகளையும், அணிகலன்களையும், உலோகத்தகட்டினாலான கண்ணாடிகள், சிரியநாட்டு கண்ணாடிப் பொருட்கள், கிண்ணங்கள், குப்பிகள் ஆகியவைகளை பெற்றுக் கொண்டனர். மேலும் இந்தப் பொருட்களைப் பெற்றுக்கொண்டு அவைகளுக்கு பகரமாக பொன் வழங்கவும் கான்டன் நகரில் கி.பி. 971–ல் கப்பல் நிறுவனம் ஒன்று அமைக்கப்பட்டது இருந்தது.[2]

நாளடைவில் இத்தகைய கப்பல் பயணங்கள் மிகுந்ததன் காரணமாக, பதினொன்றாம் நூற்றாண்டிலேயே கீழை நாடுகள் அனைத்திலும், இந்திய நாட்டின் பல மாநிலத்தவர்களும் குறிப்பாக குஜராத்தியர், தமிழர்கள் – மலேயா நாட்டினரும் குடியேறியதுடன், சீனத்துடனும், நெருக்கமாகவணிகத் தொடர்புகளை கொண்டிருந்தனர். எனினும் பன்னாட்டைச் சேர்ந்த இந்த வாணிகச் சாத்துக்களில், பலதரப்பட்ட பொருட்களின் செறிவிலும் சிறப்பிலும் அராபியர்களை மிஞ்சக்கூடியவர்கள் எவரும் இலர் என பன்னிரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த செள–கு–பெ என்ற சீன நாட்டு ஆசிரியர் தமது பயணக் குறிப்புகளில் வரைந்துள்ளார்.[3] அந்தப் பண்டங்கள் அனைத்தும் சிறு மரங்கலங்களில் மூலம் கொல்லம் துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டு அங்கு இருந்து பெருங்கப்பல்களில் நிறைத்து அனுப்பப்பட்டன. ஆதலால், அன்றைய வாணிப உலகின் சிறந்த மையமாக கொல்லம் கருதப்பட்டது.

எழுவானின் இளங்கதிர்களை எட்டிப் பிடிக்கும் வகையில் கிழக்கு கோடியின் பசிபிக் பெருங்கடலின் எல்லையைத் தொட்டு


  1. Nilakanta Sastri K. A, - History of Srivijaya (1936) p. 37.
  2. Appadorai. Dr. A. Economic Conditions of TamilNadu(1940)
  3. Hirth and Rodwill – Chan Ju–Kua p.24.