பக்கம்:முஸ்லீம்களும் தமிழகமும்.pdf/201

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

188

குறிப்பிடாமல் கழுபா என குறிககப்படடுளளது. கலிமில்லா (இறையருள் பெற்ற வெற்றியாளன்) என்ற அரபுச் சொல்லின் திரிபாக இந்தச்சொல் அமைதல் வேண்டும் என எண்ணுதற்கும் இடமுள்ளது. கி.பி. 1223 முதல் ஸ்பெயின் நாட்டை ஆட்சி செய்த முகம்மது அபு-அல் அகமது என்ற பேரரசன் இதே விருதைப் புனைந்து கொண்டு இருந்ததும் ஈண்டு சிந்திக்கத் தக்கதாக இருக்கிறது. ஆதலால் இந்தச் சொல்லைப் பலசந்தமாலை ஆசிரியர் பயன் படுத்தியதிலிருந்து இந்த நூல் பதின்மூன்றாம் நூற்றாண்டிற்குப் பிற்பட்டது என முடிவிற்கு வருதல் பயனுள்ளதாக இருக்கும். ஆனால் இலங்கைப் பேராசிரியர் ஒருவர் பல சந்த மாலை பாடலின் இலக்கண அமைதியை ஆய்வு செய்து இந்த இலக்கியம் பதின்மூன்றாம் நூற்றாண்டிற்கு முற்பட்டது என கருத்து தெரிவித்துள்ளார்.[1]

மேலும் இந்த பல்சந்த மாலையின் பாட்டுடைத் தலைவனாகிய கழுபா, வச்சிர நன்னாட்டு வகுதாபுரிக்கு இறைவன் என்பது அந்த மாலையில்

“நகுதாமரை மலர் வாவி சூழ் வச்சிர நாடர் தங்கள்
வகுதாபுரியன்ன ........"

என்ற பாடலிலிருந்து பெறப்படுகிறது. ஆனால் தமிழகத்தில் வச்சிரநாடும், வகுதாபுரியும் எந்தப் பகுதியில் எந்தக்கால எல்லையில் அமைந்து இருந்தன என்பதைப் புலப்படுத்த போது ஆதாரம் இல்லை. இசுலாமியரது கோநகரானமான பகுதாதைப் போன்று சிறப்புற்றிருந்த பெருநகர் என்ற பொருளில் வகுதாபுரி என இலக்கிய வழக்கு பெற்று இருப்பதாக சில நூல் ஆசிரியர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். எகிப்து நாட்டுப் பட்டணமான காஹிரா (கெய்ரோ)வில் இருந்து குடிபெயர்ந்து வந்தவர்கள் என்ற பொருள் கொள்ளும்படி காயல்பட்டின முஸ்லிம்கள் இலக்கிய வழக்காக, காயல் பட்டினத்தை காயினூர் என வழங்கி இருப்பதும் இங்கு நினைவு கொள்ளத்தக்கதாக உள்ளது.

நூறு நாமா பாடிய வகுதை அகமது மரைக்காயர், காயலின் வளமையைக் கூற "காகிறு நாட்டு வளம்" என்ற பகுதியை


  1. மதுரை பல்கலைக் கழகம் - இஸ்லாமியத் தமிழ் இலக்கிய தொகுதி I (1986) பக்கம். 87.