பக்கம்:முஸ்லீம்களும் தமிழகமும்.pdf/203

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

190

மேலும், பதின்மூன்றாம் நூற்றாண்டில் தமிழகத்தில் ஆங்காங்கு பரவலாக அரபிகள், தமிழக இசுலாமியராக நிலை பெற்றுக் கொண்டிருந்தனர். அப்பொழுது பாண்டியப் பேரரசரான மாற வர்மன் குலசேகர பாண்டியனது ஆட்சியில் தமிழகத்திற்கும் அரபுத்தாயகத்திற்கு இடையில் விறுவிறுப்பான குதிரை வாணிபம் நடைபெற்று வந்ததும் இதற்கு முக்கியமான காரணங்களில் ஒன்றாகும். தமிழில் தேர்ச்சி பெற்று, காப்பியம் படைக்கின்ற தகுதியையோ அல்லது தமிழ்ப்புலவர் ஒருவரது இலக்கியப் படைப்பினை காணிக்கையாகப் பெறக் கூடிய தகுதியையோ இசுலாமியப் பெருமகன் ஒருவர் அப்பொழுது பெற்று இருப்பதற்கு வாய்ப்பு இல்லை. மேலும் அந்த நூற்றாண்டிலே இந்த நூலும் இயற்றப் பட்டிருந்தால் அதனைத் தொடர்ந்து இசுலாமிய இலக்கியங்கள் வேறு எதுவும் பதினாறாவது நூற்றாண்டு முற்பகுதி வரை ஏன் இயற்றப் படவில்லை என்ற வினாவும் எழுகிறது.

அத்துடன் பதின்மூன்று, பதினான்காவது நூற்றாண்டுகளில்தான் அரபிக்குடா, பாரசீகப்பெருங்குடா நாடுகளில் இருந்து அரபிகள் பெருமளவில் மாபாரிலும் (தமிழக கடற்கரைப் பகுதி) ஈழத்திலும், மலேசியா தீபகற்ப நாடுகளிலும் குடி பெயர்ந்து வந்துள்ளனர் என்பதை வரலாற்றில் அறியும் பொழுது அரபிகள், தமிழ்ச் சமுதாயத்தில் இணைந்து கலந்து, தமிழக இசுலாமியர்களாக தமிழ் மக்களாக மாறியது பதினைந்து, பதினாறாவது நூற்றாண்டு என முடிவிற்கு வருவதே ஏற்புடைய தொன்றாகும். ஆதலால், அவர்கள் பேசுந்தமிழைப் பிறப்புத் தமிழாகக் கொண்டு பெருமையுடன் வாழத்தொடங்கியதும் அந்த நாற்றாண்டுகளில்தான்.

பதினான்காம் நூற்றாண்டின் இடையில் தமிழகம் போந்த அரபு நாட்டுப் பயணியான திமிஸ்கி கிழக்கு கடற்கரைப் பட்டினமான பத்தினி என்ற பட்டினத்தை குறிப்பிட்டுள்ளார். இந்த ஊருக்கு அடுத்துள்ள வஜ்ரம் - அல் - தவாப் "என்ற கோயில் இருப்பதாகவும் அந்தக் கோயிலுக்கு இந்து சமய மக்கள் பக்தி பரவசத்துடன் வந்து பூமியில் உருண்டு புரண்டு சென்று தங்களது நேர்த்திக் கடனை செலுத்துவதாக தமது குறிப்புகளில் பதித்

[1]


  1. Md. Hussain Nainar - Arab geographers Knowledge of S. India (1942) p. p. 44.116