பக்கம்:முஸ்லீம்களும் தமிழகமும்.pdf/205

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

192

குறிப்பிட்டுள்ளார்.[1] கி.பி. 1515ல் காயல் கடற்கரையைப் பற்றிக் குறிப்பிடும் பேராசிரியர் பர்போஸா, பழைய காயலையும் கீழக்கரை முஸ்லீம்களையும் குறிப்பிடும் பொழுது, அங்கு அரசரை போன்று செல்வ வளமும், அரசியல் செல்வாக்கு மிக்க முஸ்லிம் ஒடுவர் இருந்தார் என்றும், அங்குள்ள முத்துச்சிப்பி பாறைகளுக்கு அவர் தீர்வை வசூலித்து வந்தார் என்றும், அவரது ஆணைக்கும் தீர்ப்பினுக்கும் அனைத்து முஸ்லீம்களும் கட்டுப்பட்டு நடந்தனர். “என வரைந்துள்ளார். கி.பி. 1523ல் அங்கு போந்த இன்னொரு போர்த்துக் கீசிய நாட்டைச் சேர்ந்த கிறித்துவ பாதிரியார்கள் குழு ஒன்று. அங்குள்ள இசுலாமியர் பெரும் எண்ணிக்கையினரான பரவர்களை அடக்கி ஆண்ட சூழ்நிலையையும், அதன் காரணமாக கி.பி. 1532ல், அந்தப் பரவர்களில் பலர் இந்து சமயத்திலிருந்து, ஏசு மதத்திற்கு மதம் மாற்றம் அடைந்த விவரத்தையும் குறிப்பிட்டுள்ளது.[2] மற்றும் கி.பி. 1678ல் இராமநாதபுரம் மன்னர், உடையான் திருமலை சேதுபதி வழங்கிய செப்பு பட்டயமொன்றில் பொறிக்கப்பட்டுள்ள விருதாவளியில், அவர் வல்லமை மிக்க யவன அரசர்களை வென்றதாக தெரிகிறது.[3] இந்த நிகழ்ச்சிகளில் இருந்து பதினாறாம் நூற்றாண்டு வரை இசுலாமியர்களுக்கு தமிழகத்தின் சில பகுதிகளில் அரசியல் பிடிப்பு இருந்து வந்த விவரமும், இத்தகைய தொரு குறுநிலக்கிழார் தான் பல்சந்தமாலையின் பாட்டுடைத் தலைவனாகிய கலுபா என்பதும், ஊகிக்க முடிகிறது. அத்துடன் இஸ்லாமிய முதல் தமிழ் இலக்கியமான "ஆயிரம் மசாலா" கி.பி.1572ல் அரங்கேற்றம் பெற்றதில் இருந்து தொடர்ந்து அடுத்து அடுத்து பல இஸ்லாமியத் தமிழ் இலக்கியங்கள் தமிழுக்கு கிடைத்துள்ளன.

மேலும், தமிழ் இலக்கியத்தில் "மாலை” என்ற பகுப்பைச் சேர்ந்த சிற்றிலக்கியம் எப்பொழுது படைக்கப்பட்டது என்ற ஆய்வையும் இங்கு மேற்கொள்ளுதல் பயனுடையதாக அமையும்


  1. Arunachalam- History of Pearl Fishery in Tamil Coast p. 92, 94
  2. M.L. James – The Book of Duarte Barbosa, (London)vol Il p. p. 115 - 23
  3. A. S. S. vol. 4 No : 8 p : 59