பக்கம்:முஸ்லீம்களும் தமிழகமும்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

12

சொற்கள் பயன்படுத்தப்படுகிறது. “வெச்சல்” (ஜெர்மன்) “விஸ்ஸன்” (ஹாலந்து) என்ற சொற்கள், அரபுச் சொற்களின் ஆக்கம் தான். இவை தவிர ஆங்கிலத்தில் வழங்கப்படுகின்ற வாணிபம் சம்பந்தப்பட்ட சொற்களான, ஸ்டர்லிங், டிராபிக், கேபின், ஆவரேஜ், பார்ஜஸ்மன்சூன், பார்க், ஷல்லாப் ஆகிய சொற்கள் அனைத்தும் அராபியச் சொற்களின் மறு உருக்கள்.

மற்றும், வணிக ஒப்பந்தம், வணிகப் பிரதிநிதிகளை அயல் நாடுகளில் நியமனம் செய்தல், கடல் எல்லை நிர்ணயம், பண்டமாற்று முறைகள், துறைமுக நடைமுறைகள் ஆகிய துறைகளில் இன்று முன்னேறியுள்ள ஐரோப்பிய வர்த்தக சமூகத்திற்கு முன்னோடியாக, இன்றைக்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே தக்க வரம்புகளையும் வழிகாட்டு நெறிகளையும் உருவாக்கியவர்கள் அராபிய இஸ்லாமியர்கள். அலைகடல் ஆழியைத் துரும்பாக மதித்து அவனியை அளவிடப் புறப்பட்ட அராபியர்களது மன உறுதியையும் ஆர்வத்தையும் யாரும் வியந்து பாராட்டாமல் இருக்க முடியாது. பிற்காலங்களில் புவியியல், வானியல், வணிக இயல், கணித இயல், வேதியியல், மருத்துவம் ஆகிய துறைகளில் உலக மக்களுக்கு முன்னோடியாக விளங்கி, விஞ்ஞான கண்டுபிடிப்பு பலவற்றிற்கு வழிகோலியவர்களும் அவர்களேயாவர். தென்னகத்தில் சோழ பாண்டியர்கள் முடியாட்சி மறைந்து விஜயநகர பேரரசு தொடங்கிய காலம் வரை வாணிபத்தில் சிறப்புற்றிருந்த அமைதியான அராபியர்கள், போர்ச்சுக்கீசிய பரங்கிகளின் அக்கிரமமான, மனிதாபிமானமற்ற மிருக பலத்திற்கு எதிரே சக்தியற்றவர்களாக கடல்வழியை அந்தக் கொள்ளையரிடம் விட்டுவிட்டு ஆங்காங்கே உள்நாட்டு வாணிபத்தில் ஈடுபட்டனர்.

இங்ஙனம், கிழக்கையும் மேற்கையும், தங்களது கடல் வாணிபத்தால் இணைத்து இந்தியா, இலங்கை, ஶ்ரீவிஜயா, அன்னாம், சீனம், ஆகிய கீழை நாடுகளில், புதிய நாகரீகத்தையும் புதிய ஆன்மீக ஒளியையும் புகுத்தியவர்கள் அந்த அராபிய முஸ்லீம்கள் தான். ஆதலால், தமிழகத்தின் சிறப்பான வரலாற்றுக்காலப் பகுதியில் அரபியரது பங்கும் பிரதானமாக இடம் பெற்று இருந்தது வியப்புக்கு உரியது அன்று. என்றாலும், வாணிப நோக்குடன் தமிழகத்துக்கு வந்து சென்ற பல்