பக்கம்:முஸ்லீம்களும் தமிழகமும்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

17

கால இடைவெளியில் தமிழ்நாட்டில் இந்த தொழுகைப் பள்ளி அமைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. திருச்சி நகரின் கோட்டை ரயில்நிலையத்திற்கு அருகில் சிதைந்த நிலையில் உள்ள அந்தப் பள்ளி, இஸ்லாமியத் தமிழினத்தின் முன்னோடி முயற்சியாகும். கடந்து போன நூற்றாண்டுகளில் தமிழகம் வந்த அரபிகள் தமிழ்ச் சமுதாயத்தில் கலந்து விட்டாலும், அன்றைய தமிழகத்தின் மிகமிகச் சிறுபான்மையினராக இருந்த அவர்கள் தங்களது அன்றாட வாழ்க்கையின், உன்னதமான இறை வழிபாட்டினை நிறைவேற்றுவதற்கு எத்தகைய உறுதியான உள்ளத்துடன் இருந்தனர் என்பதை விளக்கும் வரலாற்று சாட்சியமாக விளங்கிக் கொண்டிருக்கிறது அந்தப் பள்ளிவாசல்.

இவ்விதம், தமிழகத்தில், அரபி வணிகர்களான இஸ்லாமியர்களும், அவர்களது போதகர்களான இறைவனது அனுபூதி பெற்ற வலிமார்களும், இறை நேசர்களும், கடற்கரைப் பகுதிகளிலும், பட்டணங்களிலும் ஆங்காங்கே சிறு குடியிருப்பு களையும் அமைத்து வாழ்ந்தனர். தமிழகம் போந்த இத்ததைய அராபிய வணிகர்களது குடியிருப்புகள் சங்க காலத்திலும் அதற்குப் பின்னரும் “யவனச் சேரி” என வழங்கப்பட்டது. பூம்புகார் நகரில்,

“மொழிபல பெருகிய பழிதீர் தேயத்து
புறம்பெயர் மாக்கள் கலந்தினி துறையும்...........”

இத்தகைய குடியிருப்பு இருந்ததை பட்டினப்பாலை குறிப்பிடுகிறது. இன்னும் பெருங்காதை,

“விருப்பெருஞ் செல்வமொடு வென்றி தாங்கிய
ஐம்பதி னிரட்டி யவனக்சேரியும் ............
(மகதகாண்டம் : புறத்தொடங்கியது பாடல் 3: 8)
“அமரிய நண்பின் தமருளும் தமராம்
யவனப்பாடி ஆடவர் தலைமகன்”
பெருங்கதை - இலாவணகாண்டம் பாடல். 167-168.

என்று “யவனச்சேரி” “யவனப்பாடி” என தெளிவாகச் சொல்கிறது.