பக்கம்:முஸ்லீம்களும் தமிழகமும்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

21

பொறித்துள்ளார். பிற்காலத்தில் இந்த நிலங்களை கோரிப்பாளையத்தில் எழுந்துள்ள தர்காவிற்கு உரிமை இழப்புக் காணியாக அராபிய வணிகர்கள் விட்டுக் கொடுத்திருக்க வேண்டும்.[1]

தமிழ்நாட்டின் தலைமை நகரான மதுரையில் சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் அராபிய இஸ்லாமியர் குடியேற்றம் ஏற்பட்டு இருந்தது என்பதை மேலே கண்ட வரலாற்றுச் செய்தி வெளிப்படுத்துகிறது. இதனைப் போன்றே சோழர் தலைநகராகிய தஞ்சையிலும் அராபிய இஸ்லாமியர்கள் இதே கால கட்டத்தில் இருந்து வந்ததை ராஜராஜ சோழனது தஞ்சைப் பெரிய கோயில் கல்வெட்டுத் தொடர் ஒன்றிலிருந்து சூசகமாகத் தெரிகிறது. தஞ்சைப் புறம்பாடி ராஜ்ய வித்யாதரப் பெருந்தெருவில் இருக்கும் சோனகன் சாவூர்.....” என்பதே அந்தக் கல்வெட்டுத் தொடராகும்.[2] ராஜேந்திர சோழனது ஆட்சிக் காலத்திலும் செல்வாக்குடன் வாழ்ந்த இந்தச் சோனகரை “கங்கை கொண்ட சோழபுரத்து ராஜ்ய வித்யாதரப் பெருந்தெரு திருமந்திர ஓலை நாயகனான சோனகன் சாவூர்”[3] - என கோலார் - கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. அரசரது வாய்மொழி ஆணையை ஒட்டி வரைந்து வெளிப்படுத்தும் அலுவலர் திருமந்திர ஓலை எனப்படும். மற்றும், சோழர் காலத்திய சிறந்த செப்பு பட்டயமான “லெயிடன் கிராண்ட்” (ஆனைமங்கலச் செப்பேடு)டில் கைச் சாத்திட்டவர்களில் இன்னொரு இஸ்லாமியரது பெயர் இடம் பெற்றிருப்பது தெரியவருகிறது. சத்திரிய சிகாமணி வளநாட்டு பட்டணம் கூற்றத்து சன்னமங்கலத்து கரணத்தான் அகமது துருக்கன் என அவர் குறிப்பிடப்பட்டார்.[4] இன்றைய நாக பட்டினமும் அதைச் சூழ்ந்த பகுதி தான் இந்த வள நாடும் கூற்றமும் ஆகும்.[5]


  1. (b) Alexandar Nilson - Munural of madura country (1858) part II
  2. டாக்டர் இரா.நாகசாமி — தஞ்சைப் பெருவுடையார் கோவில் கல்வெட்டுக்கள் — முதல் தொகுதி பக் 232, 257
  3. “சாமூன்” என்ற அரபிச் சொல்லின் திரிபு — சாவூர்
  4. நடன காசிநாதன் – கல்வெட்டு ஒரு அறிமுகம் (1978) பக் 83
  5. (a) T. Subbarajulu — Political geography of Chola country(1973) Map 11 List No : 91 (3)