பக்கம்:முஸ்லீம்களும் தமிழகமும்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

22



இந்த இஸ்லாமிய அரபிகளை, ஏனைய வெளிநாட்டினரைப் போன்றே தமிழ் இலக்கியங்கள் பாகுபாடு இல்லாமல் ஒரு கால கட்டம் வரை “யவனர்” எனக் குறிப்பிட்டு வந்தன. ஆனால், கி. பி.மூன்றாம் நூற்றாண்டிற்குப் பின்னர் கிரேக்கர் உரோமர் ஆகியவர்களது தமிழகத்துடன் வணிகத் தொடர்புகள் முற்றாக முறிந்த பிறகு, தமிழகத்துடன் தொடர்பு கொண்டிருந்த மேனாட்டார் இஸ்லாமிய அரபியர்கள் மட்டுந்தான் என்பது தெளிவு.

இதனை வலியுறுத்த பேரறிஞர் மு. ராகவ ஐயங்காரது ஆராய்ச்சிக் கருத்துக்கள் இங்கு ஒப்பு நோக்கத் தக்கனவாக உள்ளன மகா வித்வான் அவர்கள், “வெளிநாட்டு வியாபாரத தொடர்புகள்” பற்றிய தமது கட்டுரையில்[1]

“... ... ... இவ்வாறு தமிழ்நாட்டில் மலிந்திருந்த யவனர் என்போர், கிரேக்கம், அரேபியா, எகிப்து முதலிய நாடுகளில் இருந்து வந்தவர்களே. இவருள் கிரேக்க யவனர் இங்கு வந்து வியாபாரம் செய்தவராயினும், சங்க நாளிலும் அதன் பின்பும் தமிழகத்தில் மிகுதியாகத் தங்கியவர்கள் சோனகர் என்னும் யவனராவர். தமிழ் கூறும் பதினெண் தேயங்களில் ஒன்றான் “சோனகம்” பரத கண்டத்திற்கு மேற்பால் நாடுகளில் ஒன்று என்று சொல்லப்படுவதால் அது அரேபியா என்னும் தேசமாக கருதப்படுகிறது. அபிதான சிந்தாமணி, யவனர், அரபிய நாட்டு மிலேச்சர் என விளக்கம் தந்துள்ளது. இன்றும், காயல் பட்டினம், கீழக்கரை ஆகிய கடற்கரை பகுதிகளில் இச்சோனகர் மிகுதியாக வாழ்கின்றனர். இவர்கள் முற்காலத்தே காவிரி பூம்பட்டினத்தில் வசித்து வந்த வியாபாரக் கூட்டத்தைச் சேர்ந்தவர் என்றும், பிற்காலத்தில் பாண்டிய நாடு அடைந்தவர் என்றும் தங்கள் ஆதி வரலாறு கூறுகின்றனர். இவர்களது பூர்வ பாஷை அரபியாயினும், பன்னூற்றாண்டுகளாகத் தமிழகத்தில் தங்கிவிட்டார்களாதலாலும், தமிழருடன் சம்பந்தம் செய்தும், தமிழர் வழக்கங்களைப் பழகி வந்தமையாலும் இவர் தமிழ் மொழியே பேசுபவராயினர், தமிழ் மக்கள் இச்சோனகரை யவனர் என்னும் பெயரால் அழைத்து வந்தனர்


  1. மகாவித்துவான் மு. ராகவ ஐயங்கார் – செந்தமிழ் – ஆராய்ச்சி தொகுதி (1938) பக் 154