பக்கம்:முஸ்லீம்களும் தமிழகமும்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

35

யரான நச்சினார்க்கினியர், பத்துப்பாட்டில் யவனர் என்ற சொல்லுக்கு சோனகர் என்றே பொருள் பிரித்துள்ளார். இவரை அடுத்து வாழ்ந்த பரஞ்சோதியாரும் நமது திருவிளையாடல் புராணத்தில் திருமணப்படலத்தில் சோனகர் பற்றி பாடியுள்ளார்.[1] அதே காலவரையில் படைக்கப்பட்டுள்ள சூடாமணி, திவாகர நிகண்டுகளில் சோனகருக்கு விளக்கம் வரையப்பெற்றுள்ளது. தமிழ்மொழி வழங்கிய பதினெட்டு தேசங்களில் சோனகமும் ஒன்று என நன்னூலில் ஆசிரியர் பவணந்தியார் குறித்துள்ளார். இவர் பதின்மூன்றாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். சென்னை பல்கலைக்கழக பேரரகராதியான லெக்ஷிகன் “சோனகம்” இந்திய துணைக் கண்டத்திற்கு மேற்கே உள்ள அரேபியா, பாரசீகம் நாடுகள் என தெளிவுபடுத்தியுள்ளது. சிலப்பதிகார உரையாசிரியரான அடியார்க்கு நல்லார், பழந்தமிழ்நாட்டில், குரவைக்கூத்து, ஆய்ச்சியர் கூத்து போன்று, “சோனக கூத்து” என ஒருவகைக் கூத்து நடிக்கப்பட்டதை தமது உரையில் வரைந்துள்ளார். அதனை “துஞ்சாத அம்மைப் பூச் சோனக மஞ்சரி” எனக் குறிப்பிட்டுள்ளார். கடற்கரைப் பட்டினங்களான தொண்டி, மண்டபம், வேதாளை, கீழக்கரை, தூத்துக்குடி, காயல்பட்டினம், கடலூர் ஆகிய ஊர்களில் வழக்கில் உள்ள “சோனகர் தெரு”, என்ற பகுதிகள், பழந்தமிழர்களது குடியிருப்புக்களினின்றும் இவர்களது மனைகளை வேறுபடுத்திக் காட்டுவதற்காகவே எழுந்தவையாகும். அவை போன்றே, அவர்களது குடியிருப்புகளில் சில, அவர்களது தொன்மையைச் சுட்டும் வகையில் “சோனகன் பேட்டை” (இராமநாதபுரம் மாவட்டம்) “சோனகன் விளை” (நெல்லை மாவட்டம்) என்ற பழம்பெயர்களுடன் இன்றும் வழங்கி வருகின்றன. இதனை "நெய்தல் சார்ந்த மருதத்தில் நேர்வார் துலுக்கர், சோனகராம்” என பிரபந்த திரட்டு சுட்டியுள்ளது.[2] அதே நூலில் இன்னொரு பாடல், பச்சைமலை, கருப்பாறு, வச்சிர வளநாடு, காயல்பட்டினம், ஊர் மாலை, குங்குமம், பசும்புரவி, வெள்ளையானை, சிங்க கொடி ஆகியவை சோனகருக்கு உரியன என்பதாகக் குறிப்பிடுகிறது.[3]


  1. பிரபந்த திரட்டு – (சென்னை 1982) பாடல் 325
  2. பிரபந்த திரட்டு - (சென்னை 1982) பாடல் 325
  3. பிரபந்த திரட்டு, (சென்னை 1982) பாடல் 326