பக்கம்:முஸ்லீம்களும் தமிழகமும்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

38

எனக் குதிரையின் அழகில் மனதை பறிகொடுத்துப் பாடுகிறார் சிவகசிந்தாமணி ஆசிரியர்.

குதிரைகள், தமிழ்நாட்டிற்குப் புதுமையானவை அல்ல. குதிரைகளின் வண்ணம், வடிவு, தன்மை ஆகிய இயல்புகளைக் கொண்டு அவைகளுக்கு, பாடலம், கோடகம், இவுளி, வண்ணி, பரி, கந்துகம், புரவி, கனவட்டம், துரகம், கற்கி, அச்சுவம், துரங்கம், யவனம், குரகதம், வையாளி என பல பெயர்கள் தமிழ் இலக்கியங்களில் சூட்டப்பட்டுள்ளன. இன்னும் அவைகளின் உடற்கூறு இலக்கணங்களையும் வரையறுத்து பல நூல்களில் விரிவாகக் கூறப்பட்டுள்ளன. பரஞ்சோதி முனிவர், தமது பெருநூலான திருவிளையாடற் புராணத்தில் பல வகையான பரிகளையும், அவைகளின் இயல்புகளையும் அவைகள் எந்தெந்த நாடுகளைக் சார்ந்தவை என்பதையும் விவரமாகக் குறிப்பிடுவதுடன், "யவனம்" என்ற வகைப் புரவி மக்கத்தில் உள்ளவை என பாகுபடுத்தி பாடியுள்ளார். கடம்பர்களும் பல்லவர்களும் தங்களது ஆட்சியில் குதிரைகளை நம்பி இருந்ததாக பேராசிரியர் நீலகண்டசாஸ்திரிகள் வரைந்துள்ளார்.[1] தொன்றுதொட்டு, தமிழ்நாட்டின் நால்வகைப் படைப் பகுப்பில் குதிரைப்படையும் ஒரு பிரிவாக இருந்து வந்துள்ளதை யாவரும் அறிவர். அறுபத்து நான்கு கலைகளில் குதிரைஏற்றமும் ஒன்றாக இருந்தது. போரில் குதிரையின் மறத்தைப் பற்றிப் பாடுவதற்கான துறையொன்று வகுக்பட்டிருந்ததை புறப்பொருள் வெண்பாமாலை சுட்டுகின்றது. பத்தாவது நூற்றாண்டில், சோழப் பேரரசுப் பெருக்கத்திற்கு' குதிரைகள் பெருமளவில் தேவைப்பட்டன. இந்த உண்மையை அந்தக் காலத்து இலக்கியங்களான கலிங்கத்துப்பரணி, குலோத்துங்க சோழன் பிள்ளைத் தமிழ், மூவருலா, முத்தொள்ளாயிரம் ஆகிய இலக்கியங்களில் சோழர்களின் வெற்றியுடன் குதிரைகள் பற்றிய புகழ்ச்சியும் புனைந்து ஆங்காங்கே குறிப்பிடப்படுகிறது. பாரசீக, அரபுநாடுகளில் இருந்து, சோழநாட்டில் குதிரைகள் இறக்குமதி செய்யப்பட்ட பொழுது அரபிய முஸ்லீம்களும் தமிழகத்திற்கு உடன் வரவேண்டிய நிர்ப்பந்தமும் ஏற்பட்டது. தொடக்கத்தில், குதிரைகள் பெரும்பாலும் கொங்கண, கேரளக்


  1. Nilakamta Sastri. K.A. Foreign Notices of South India(1972) Introduction.