பக்கம்:முஸ்லீம்களும் தமிழகமும்.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
சீதக் காதி மணிமாடம்,

688, அண்ணாசாலை

சென்னை – 6

அணிந்துரை

இந்திய சமுதாயத்தின் ஒரு பிரிவினரான தமிழக முஸ்லீம்களது வரலாறு தொன்மையானது. ஏழாம் நூற்றாண்டின் முடிவில் அரபு நாட்டு இஸ்லாமிய வணிகர்கள் நமது கீழைக்கடற்கரையின் பல பகுதிகளில் கரையிறங்கியதிலிருந்து இந்த வரலாறு தொடக்கம் பெறுகிறது. அவர்களுடன் சமயச் சான்றோர்களும் இறைநேசர்களும் இந்த வரலாற்றின் நாயகர்களாக விளங்குகின்றனர். அவர்களது தன்னலமற்ற தொண்டும் தூய வாழ்வும் அமைதியான ஆரவார மற்ற நடைமுறைகளும் தமிழ் மண்ணில் இஸ்லாம் தழைத்து வளர்வதற்கு உதவியதுடன், தமிழகத்தின் அரசியல், கலை, பண்பாடு, இலக்கியம் ஆகிய புலங்கள் புதிய ஒளியும் உயர்வும் பெறுவதற்கு உறுதுணையாக இருந்து வந்துள்ளன.

இந்தப் புதிய தாக்கத்தை வரலாற்று அடிப்படையில் முறையாக ஆய்வு செய்தல் மிகவும் பயன் உள்ள ஒரு பணியாகும். இந்த நோக்கில் எங்களது அறக்கட்டளையின் இஸ்லாமிய கலை, பண்பாட்டு, ஆய்வுமையம் 1988ஆம் ஆண்டின் சிறந்த தமிழ் நூல்களுக்கான போட்டிக்கு “முஸ்லிம்களும் தமிழகமும்” என்ற தலைப்புப் பொருளினை அறிவித்தது. எழுத்தாளர் பலர் ஆர்வத்துடன் தங்கள் ஆய்வுரைகளை அனுப்பி இந்தப் போட்டியில் கலந்து கொண்டனர். அவற்றுள் சிறந்த ஆக்கமாக இராமநாதபுரம் டாக்டர் எஸ். எம். கமால் அவர்களது தொகுப்புரை தேர்வு செய்யப்பட்டது. இமாம் சதக்கத்துல்லா அப்பா அவர்களது நினைவுப்பரிசான ரூபாய் பத்தாயிரம் கொண்ட பொற்கிழியும், பாராட்டு இதழும் அன்னாருக்கு 21-6-1989ஆம் தேதி அன்று சென்னையில் நடைபெற்ற விழாவில் வழங்கப்பட்டது.