பக்கம்:முஸ்லீம்களும் தமிழகமும்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

44

பெரும்பாலான முஸ்லீம்கள், இன்றும் “ராவுத்தர்” என்ற விகுதியை தங்கள் பெயருடன் சேர்த்துக் கொள்வது போல தமிழ் நாட்டில் உள்ள தெலுங்கு மொழி பேசும் நாயக்கர்களில் சிறு ஒரு பிரிவினர் தங்கள் பெயருடன் “ரவத்” என்ற விகுதியையும் இணைத்து வழங்குகின்றனர். தென்னகத்தில் நிலவும் சாதிகளையும் குடிகளையும் முழுமையாக ஆய்வு செய்து பல தொகுதிகளாக தமது ஆய்வினை வெளியிட்டுள்ள ஆசிரியர் எட்கார் தர்ஸ்டன், ராவுத்தர் என்பவர்கள், இஸ்லாமிய மக்களான லெப்பை, மரக்காயர், மற்றும் சோனகர் பயன்படுத்தும் விருதுப்பெயர் என்றே குறிப்பிட்டுள்ளார்.[1] பிற்கால இலக்கியமான பிரபந்த திரட்டு, தமிழகத்தில் வசித்து வரும் பல்வேறு சாதிகளில் ராவுத்தரும் ஒரு பிரிவினர் என தொகுத்துள்ளது.[2]

தங்களது தொன்மையை இவ்விதம் நினைவு கூறும் வகையில் தமிழக ராவுத்தர் இன்றும் மணவிழாக்களில் பொழுது, மணமகனை நன்கு அலங்கரித்து குதிரைமீது ஏற்றி வைத்து, மணமகள் இல்லத்திற்கு அழைத்துச் செல்லும் வழக்கம் உடையவர்களாக இருக்கின்றனர். இந்தப்பழக்கம், தமிழக இஸ்லாமியர்களிடையே நானூறு ஆண்டுகளுக்கு முன்னரும் இருந்து வந்தது என்பதை பெரும் புலவர் உமறுவின் பாடல்களில் இருந்து புலப்படுகிறது. இறைமறையை வெளிப்படுத்தி இஸ்லாத்தைப் பரப்பிய ஏந்தல் நபி நாயகம் அவர்களது வாழ்க்கையை விவரிக்கும் சீறாப்புராண காவியம், தமிழ் நாட்டில் இயற்கைப் பின்னணி, பழக்க வழக்கங்கள், மரபுகள் ஆகியவைகளை உள்ளடக்கியதாக புனையப்பட்டு உள்ளது. மணமகனாகிய முகம்மதுநபி (ஸல்) அவர்கள் மணக்கோலத்துடன் பரியில் அமர்ந்து பவனியாக மணமகள் இல்லம் சென்றதை,

        “ தாவிய பரி மேற் சேனைத் தளத் தொடும் வீதி வாயின்
          மேவிய வள்ளலார் தம் மெய் எழில் நோக்கி ... ...”

        “ கடுநடைப் புரவி மேலாய் கவிகை மாநிழற்ற வந்த
          வடிவுடை முகம்மதின் தன் வனப்பலால் வனப்பு மில்லை .... ..”



  1. Edgar Thurston-Castes and Tribes in South India (1909) vol. 5. p. 247
  2. பிரபந்த திரட்டு (1982) பாடல் எண் :362