பக்கம்:முஸ்லீம்களும் தமிழகமும்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

45

 “திரையின்றி பிறந்த மொழியார் செழுமனித் தீபங் களேந்த
 இருபுற நெருங்கி அயினிநீர் சுழற்ற வெண்ணில ஆலத்தி எடுப்ப
 பாவையின் மறையில் குரவையுஞ் சிலம்ப பரியை விட்டிரங்கின என்றே.”

எனவும் அவர் பாடியுள்ளார்.[1] பாய் பரியினரான இஸ்லாமியரைப் போன்று தமிழகத்தில் “நகரத்தார்” “நாட்டுக் கோட்டையார்” என்று சிறப்புடன் அழைக்கப்படுகின்ற செட்டி மக்களது மணவினையில் முதல்அங்கமாக, இவுளி மீது மணமகன் இவர்ந்து மணமகள் இல்லம் சென்று மணவினை மேற்கொள்வது இன்றளவும் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது. அத்துடன் இந்திய நாட்டின் பிற மாநிலங்களான காஷ்மீர், ராஜஸ்தான், பஞ்சாப், உத்திரப்பிரதேசம், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் உள்ள மக்களிடமும் இந்த பழக்கம் இருந்து வருகிறது. இதனை, அங்கு “பராத்” (பவனி) யென அழைக்கின்றனர். இன்னும் விஞ்ஞானத்தில் மிகமிக வளர்ச்சியுற்ற சோவியத் யூனியனில் கூட காஜகிஸ்தானில் மணமகன், மணமகளைத் தனது குதிரையில் ஏற்றிக்கொண்டு ஊருங்கிளையும் உடன்வர, மணவினைப் பதிவு அலுவலகத்திற்குச் செல்வது இன்றளவு வழக்கமாக இருந்து வருகிறது.

இவ்விதம், தமிழகத்தில் அரபிக் குதிரைகளுடன் வந்து தங்கி நிலைத்த தமிழக இசுலாமியரான ராவுத்தர்களது உறைவிடம், “ராவுத்தர்” என்ற விகுதியுடன் பல ஊர்கள் அமைந்து உள்ளன. அவைகளில் சில :

1. ராவுத்த நல்லூனர்  கள்ளக்குறிச்சி வட்டம்
2. ராவுத்த நல்லூர்  காஞ்சிபுரம் வட்டம்
3. ராவுத்தன்பட்டி  குளித்தலை வட்டம்
4. ராவுத்தன்பட்டி  திருமங்கலம் வட்டம்
5. ராவுத்தன் வயல்  பட்டுக்கோட்டை வட்டம்



  1. உமறுப்புலவர் - சீறாப்புராணம் - மணம்புரி படலம் பாடல்கள் 58, 73