பக்கம்:முஸ்லீம்களும் தமிழகமும்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

49

மரக்கலக் காணம் என்பதே அந்த வரியாகும். இதே சொல் பிற்காலத்தில் மரக்காணம் என மருவியுள்ளது. செங்கை மாவட்டத்தில் சென்னை பட்டினத்திற்கு அருகில் உள்ள கடல் துறை ஒன்றினுக்கு மரக் காணம் என்ற பெயரே நிலைத்துவிட்டது. இந்த ஊரைப் போன்று, இராமநாதபுரம் மாவட்டத்தில் “மரைக்காயர்" என்ற பெயருடன் கடற்றுறை யொன்று மண்டபத்திற்கு அண்மையில் "மரைக்காயர் பட்டினம்" என வழங்கி வருகிறது. கீழக்கரையில் வாணிபச் செல்வாக்கில் மிகுந்து நின்ற ஹபீபு மரக்காயர் என்பவர் நினைவாக எழுந்தது இந்த ஊர். மற்றும், புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பதினைந்தாவது நூற்றாண்டு கல்வெட்டு ஒன்றில் "மரக்கலச் சுதந்திரம" என்றதொரு தொடர் காணப்படுகிறது.[1] ரக்கலங்கள் அமைக்கத் தகுந்த மரங்களைக் காடுகளில் இருத்து வெட்டிக்கொள்ளும் உரிமைதான் இங்ங்னம் குறிக்கப்பட்டுள்ளது.

இந்த மரைக்காயரில் ஒரு பிரிவினர் - "தண்டல்” என அழைக்கப்பட்டுவந்தனர். இதனது நேரடியான பொருள் படகுத்தலைவன் என்பதை தமிழில் மட்டும் அல்லாமல், தண்டல் (சிங்களம்)தண்டெலு (தெலுங்கு) தந்தல் (மலையாளம்)தண்டேல் (உருது) (அரபி) ஆகிய பிற மொழிச் சொற்களிலும் வழங்கப்படுவது இங்கு சிந்திக்கத்தக்கது. கடல் வாணிபத்தின் பிறிதொரு பகுதியான மீன் வணிகத்தில் ஈடுபட்டுள்ள இன்னொரு பிரிவினர் "சம்மாட்டி" என்றும் அழைக்கப்படுகின்றனர். மீன் பிடித்தலுக்குப் பயன்படும் நடுத்தர வகையான “சாம்பான்” என்ற வள்ளத்தை இயக்குபவர் என்ற பொருளில் சாம்பான் ஓட்டி காலப்போக்கில் சம்மாட்டி யானதாகத் தெரிகிறது. இராமநாதபுரம் கடற்கரைப் பகுதிகளில் உள்ள இந்து, இஸ்லாமியர் ஆகிய இரு பிரிவினரான மீன் வணிகர்களும் சம்மாட்டி என்றே குறிக்கப்படுகின்றனர். சித்தூர் தர்ஷணப் பள்ளியின் கி.பி. 1409ம் ஆண்டு கல்வெட்டிலும் பரமக்குடி வட்டம் எமனேஸ்வரம் கிரா


  1. Pudukottai State Inscriptions No : 58