பக்கம்:முஸ்லீம்களும் தமிழகமும்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

51

ஈதல் அறத்திற்கு ஈடாக நின்றன. பெரும் புலவர்களான படிக்காசுத் தம்பிரானும் நமச்சிவாயப் புலவரும் உமறு கத்தாப் புலவரும் இயற்றிய பாக்கள் அவரது வள்ளண்மைக்கு கால மெல்லாம் கட்டியங்கறி, அவரது புகழைப் போற்றி வருகின்றன.[1] வள்ளல் அவர்களது வாணிபச் சிறப்பை பெரும் புலவர் உமறு கத்தாப்பின் "சீதக்காதி திருமண வாழ்த்து’’ பாக்கள் வழிகாணலாம். திரிகாலமும் உணர்ந்த தவச் செல்வர் ஞானி சதக்கத்துல்லாவை ஆசானாகவும், வணங்காமுடி வேந்தரான விஜய ரகுநாத (கிழவன்) சேதுபதியை உடன்பிறவாச் சோதரராகவும் கொண்டிருந்த இந்த வள்ளலை, தமிழ் வழங்கும் ஐந்திணை யெங்கும், செத்தும் கொடுத்த சீதக்காதி என, சென்ற இருநூறு ஆண்டுகளுக்கு மேலாக முழங்கி வருவதே அவரது நல்லியல்புகளுக்கு நிலையான சான்றாகும்.


  1. பிறையன்பன் - கலையும் பண்பாடும் (இலங்கை)1962 - பக். 58